Published : 03 Jun 2023 08:15 PM
Last Updated : 03 Jun 2023 08:15 PM

Odisha Train Accident | ரயில் விபத்தை காரணம் காட்டி விமானக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசு அறிவுரை

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தை காரணம் காட்டி விமானங்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “ஒடிசாவில் நிகழ்ந்துள்ள துரதிஷ்டவசமான விபத்தை காரணம் காட்டி புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ரயில் விபத்து சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ எந்தவித கூடுதல் தொகையையும் பயணிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது” எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், டிடி தொலைக்காட்சிக்கு பேட்டி , “இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும். ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x