Published : 03 Jun 2023 04:48 PM
Last Updated : 03 Jun 2023 04:48 PM

ஒடிசா ரயில் விபத்து - சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி

பாலசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. முதலில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதி பின்னர் அருகில் மற்றொரு தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் செல்லவுள்ளார்.

அங்கு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் சொல்லவுள்ளார். அதோடு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறியவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x