Last Updated : 11 Apr, 2024 11:06 AM

 

Published : 11 Apr 2024 11:06 AM
Last Updated : 11 Apr 2024 11:06 AM

வனத்தில் மீட்பு பணியில் ஈடுபடும் வன உயர்நிலைப் படையினருக்கு எட்டாக்கனியான ‘ரிஸ்க் அலவன்ஸ்’

பிரதிநிதித்துவப் படம்

கோவை: தமிழக வனத்துறையில் வனத்தீ மற்றும் சவாலான வன விலங்கு மீட்பு பணிக்கென உருவாக்கப்பட்ட ஆல்பா, டெல்டா வன உயர் நிலைப் படையினருக்கு போதிய ‘ரிஸ்க் அலவன்ஸ்’ வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆல்பா படைக்கு கூடுதலாக வனத் துறையினரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 2018-ல் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து தடுப்பு மற்றும் வன விலங்குகள் மீட்பு பணியில் ஈடுபட கோவை மற்றும் தேனியில் வன உயர் நிலைப் படைகள் உருவாக்கப்பட்டன. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் கோவையில் ‘ஆல்பா’ என்ற குழுவும், தேனியில் ‘டெல்டா’ என்ற குழுவும் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு குழுவிலும் 1 வனச்சரகர், 2 வனவர்கள், 5 வனக்காவலர்கள் அடங்கிய 8 பேர் இடம் பெற்றனர். இவர்களுக்கு 4 மாத பயிற்சியும் வழங்கப்பட்டது. கோவையில் இயங்கிவரும் ஆல்பா வன உயர்நிலைப் படை, தமிழக வன உயர் பயிற்சி அகாடமி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ளது. வன விலங்குகளான யானை, புலி, சிறுத்தை மீட்பு பணிகளுக்கு தேவைப்படும்போது தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் உத்தரவின் பேரில் இக்குழு அதிரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து, வன உயர் நிலைப் படையினர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிக்காக அமைக்கப்பட்ட ஆல்பா குழுவினர் பல்வேறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழு அமைக்கப்பட்டது முதல் முதுமலையில் 5 பேரை கொன்ற டி23 புலி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம். தேனியில் அரிக்கொம்பன் யானை மீட்பு, கன்னியாகுமரி வனப் பகுதியில் புலி மீட்பு மற்றும் கூடலூரில் அண்மையில் 2 பேரை கொன்ற சிறுத்தை மீட்பு மற்றும் மதுக்கரை வனப்பகுதியில் வனத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டோம்.

இது தவிர, தேனியில் டெல்டா என்ற குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், பாம்பு பிடிக்க தேவையான உபகரணங்கள், மலையேற்றத்துக்கு தேவையான உபகரணங்கள், துப்பாக்கி, வன விலங்குகளை தூக்கிச் செல்வதற்கான ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்டவை உள்ளன. இக்குழுவினர் அனைத்து மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுள்ள 8 பேர் கொண்ட குழுவால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

எனவே, இக்குழுவுக்கு போதிய வனத்துறையினரை புதியதாக நியமிக்க வேண்டும்.இதன் மூலம் மீட்பு பணிகளின் போது ஆள் பற்றாக்குறை பிரச்சினை இல்லாமல் இருக்கும். 2019-ல் உருவாக்கப்பட்ட ஆல்பா வன உயர் நிலைப் படையில் சேரும் வனத்துறையினருக்கு, வன விலங்கு மீட்பு உள்ளிட்ட சவாலான பணிகளை செய்யும் பணி என்பதால் ‘ரிஸ்க் அலவன்ஸ்’ தருவதாகக் கூறினர். ஆனால், இதுவரை ரிஸ்க் அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அதிரடிப்படையில் ( எஸ்டிஎப் ) ரிஸ்க் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. அதுபோல வன விலங்குகளை மீட்கும் உயிருக்கு ஆபத்தான பணியில் ஈடுபடும் ஆல்பா, டெல்டா வன உயர்நிலைப் படையினருக்கும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இது தவிர வனத்துறையினருக்கு மலையேற்றம், ஆற்றைக் கடந்து செல்லுதல், மருத்துவ உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x