Published : 11 Jan 2024 05:53 PM
Last Updated : 11 Jan 2024 05:53 PM

கொள்ளிடத்தில் 6 ராட்சத போர்வெல் - நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதால் கிளியநல்லூர் மக்கள் எதிர்ப்பு

மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு. | படங்கள்: ர. செல்வமுத்துகுமார்  |

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1,500 ஏக்கர் நஞ்சை, 1,000 ஏக்கர் புஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. அய்யன்வாய்க்கால், பெருவளை வாய்க்கால் என 2 வாய்க் கால்கள் இருந்தாலும் கிணற்று நீரை நம்பித்தான் இப்பகுதியில் தற்போது விவசாயம் நடைபெறுகிறது. ஊருக்கு அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவுக்கு உள்ளது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், துறையூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக கிளியநல்லூர் கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி 500 மீட்டருக்குள் 6 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் அண்மையில் அளித்த மனுவில் கூறியிருப்பது: எங்கள் கிராமத்தில் கொள்ளிடம் கரயில் நீர் சேகரிப்பு கிணறுடன் கூடிய 6 ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, விவசாயமும் பாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெல் ஊழியர் பிரபாகரன் கூறியது: கிளியநல்லூர் கிராம விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து தான் பாசனம் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தினோம். தற்போது குடிநீர் குழாயை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. 15 அடி முதல் 30 அடிக்குள் கிடைத்த நிலத்தடி நீர், தற்போது 80 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

இந்நிலையில், எவ்வித அறிவிப்பும் இன்றி, அம்ரித் 2.0 திட்டத்தின் கீழ் துறையூர் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றங்கரையில் 6 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து வருகின்றனர். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 85 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க உள்ளனர். இதனால், கிளியநல் லூர் மட்டுமின்றி சுற்றி உள்ள 3-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கோரி ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு, நீர்வளத் துறை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினோம். ஆனால் நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் கொள்ளிடம் ஆற்றில் செறிவூட்டப்படும் என தெரிவித்துள்ளனர். இதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

ஏனெனில் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாசனத்தை நம்பிதான் எங்கள் ஊர் மக்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் 2 வாய்க் கால்களிலும் ஆண்டுக்கு 10 மாதம் தண்ணீர் வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் 6 மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. தற்போது 2 மாதம் தண்ணீர் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

இல்லையெனில் நிலத்தடி நீர் செறிவூட்ட என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பதை முறையாக அதிகாரிகள் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம மக்கள் அளித்த மனுவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘‘கொள்ளிடம் ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் நீர் செறிவூட்டப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x