Published : 09 Oct 2023 03:45 PM
Last Updated : 09 Oct 2023 03:45 PM

கரைபுரண்டு ஓடிய வைகை இன்று கட்டாந்தரை: மணல் கொள்ளையால் நீர்த்துப்போன நீர் ஊற்றுகள்!

ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத மதுரை வைகை ஆறு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வைகை ஆற்றை நம்பி இருபோக விவசாயம் செழிப்பாக நடந்து வந்தது. தற்போது அந்த விளை நிலங்கள் பெரும்பாலானவை கான்கிரீட் வீடுகளாகி விட்டன. சங்க காலம் முதல் தற்போதைய கணினி காலம் வரை வைகையின் பெருமைகள் அழியாமல் உள்ளன. அப்படி ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய வைகை ஆறு, தற்போது சொட்டு தண்ணீர் இன்றி அடையாளம் இழந்துள்ளது.

வைகை அணையில் தண்ணீர் திறந்து விட்டாலும்கூட தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லாமல் சிற்றோடை போல செல்கிறது. மேலும் தற்போது கழிவு நீரோடையாக மாறி விட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றை பொலிவுபடுத்துவதாக கூறி கரையோரங்களில் சுவர் எழுப்பி நகர்ப்புறங்களில் பெய்யும் மழைநீர் ஆற்றில் விழாமல் செய்து விட்டனர். அதனால், பெரும் மழை பெய்தாலும் வைகை ஆற்றில் நீரோட்டம் இருக்காது.

முன்பு வைகை ஆற்றில் ஓடும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட மன்னர்கள் திட்டமிட்டு ஏராளமான கால்வாய், குளங்களை உருவாக்கினர். ஆனால், இன்று அந்த நீர்நிலைகள் பெரும்பாலும் மாயமாகி விட்டன. கடைசியாக வைகை ஆற்றில் கள்ளழகர் திருவிழாவுக்கு மே 5-ம் தேதி 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் வைகை ஆற்று பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாக காட்சி அளிக்கின்றன.

இதுகுறித்து வைகை பாதுகாப்புக் குழு தலைவர் அண்ணாத்துரை கூறியதாவது: ‘‘வைகை ஆறு நிரந்தரமாக வறண்டுபோக முக்கியக் காரணம் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடங்கி அதன் வழித்தடங்கள் வரை நடந்த மணல் கொள்ளைதான். ஆற்றங்கரைகளில் தூசிப் பட்டா நிலங்களிலும் மணல் அள்ளுகின்றனர்.

சவடு மண் அள்ள அனுமதி வாங்கிக் கொண்டு ஆற்று மணல் கொள்ளை நடக்கிறது. இதைத் தெரிந்தே பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அணையில் தண்ணீர் திறந்தாலும் ஆற்றில் ஓடை போல தண்ணீர் செல்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் எட்டாக்கனியாகி விட்டது.

மணல் வெளியாக காணப்படும் வைகை ஆறு. இடம்: கடமலைக்குண்டு.)
படம்: என்.கணேஷ்ராஜ்

வைகை ஆற்றில் செக்காப்பட்டி கிராமத்தின் கீழே குள்ளிசெட்டிப்பட்டி, சித்தர்கள் நத்தம், நடுகோட்டை, விளாம்பட்டி, குருவித்துறை, சோழவந்தான், கொடிமங்கலம், கீழமாத்தூர், துவரிமான் வரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை நடந்து முடிந்து விட்டது. மணல் தோண்டிய இடங்களில் ஆற்றின் வழித்தடங்கள் மேடு, பள்ளங்களாக மாறி விட்டன. அந்தப் பள்ளங்களை கடந்து தண்ணீர் வருவது சிரமமாகி விட்டது.

வைகை ஆற்றில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு 161 உறை கிணறுகள் உள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்ட கிணறுகள் காய்ந்துபோய் அதன் மோட்டார்களை கழற்றி எடுத்து விட்டனர். அந்த உறை கிணறுகளில் தண்ணீர் வராத காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.

கைக்கு எட்டிய தொலைவில் வைகை ஆற்றில் கிடைத்த தண்ணீரை விட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் விரயம் செய்து காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பஞ்சம் தாங்கி மலை, மேகமலை பகுதியில் காடுகளை அழித்து பணப் பயிர்கள் பயிரிடத் தொடங்கி விட்டனர். மேலும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றி விட்டனர்.

கடந்த காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த வைகை ஆற்றுக்கான நீர் ஊற்றுகள் 9 மாதங்கள் வரை தண்ணீர் கொடுத்து வந்தன. ஆனால், தற்போது மழை பெய்யும் 3 மாதங்கள் வரை நீர் ஊற்றில் தண்ணீர் வருவதே அபூர்வமாகி விட்டது. மற்றொருபுறம் வைகை ஆற்றின் வழிநெடுகிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி, விவசாயம் செய்கின்றனர். அவர்கள், மட்டுமில்லாது வணிக நோக்கில் நிறுவனங்களும் ஆற்றின் இருபுறமும் பெரிய ஆழ்துளை கிணறுகளை அமைத்து 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.

வைகை ஆறுக்கு சோத்துப்பாறை, சுருளி ஆறு, நாகலாறு, மருதாநதி, மஞ்சளாறு போன்ற ஏராளமான கிளை ஆறுகள் உள்ளன. இந்தக் கிளை ஆறுகளின் வரத்துப் பகுதிகள் முழுவதும் அடைபட்டு சரியாக பராமரிக்கப்படாமல் தூர்வாரப்படாமல் உள்ளன.

மதுரையில் துவரிமான் பகுதியில் வைகை ஆற்று படுகை பகுதிகளை தாண்டி ஆற்றுக்குள் மரங்களை நட்டு வைத்துள்ளனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. இதனால் சோழவந்தானில் இருந்து கோச்சடை வரை ஆற்றில் சீமை கருவேல மரங்கள் படர்ந்துவிட்டன. மேலும் கழிவையும், குப்பையையும் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x