Published : 16 Mar 2021 04:14 PM
Last Updated : 16 Mar 2021 04:14 PM

தேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவர்வது ஆர்ப்பரிக்கும் திட்டங்களா? அள்ளிவீசும் சலுகைகளா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதியும் அறிவித்தாயிற்று, வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்கு இப்போதே பஞ்சமில்லை. இத்தேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவரப்போவது உங்கள் பகுதிக்கு முன்னேற்றத்தை அளிக்கும் வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளா? அல்லது உங்களுக்கு நேரடி பயன் தரும் இலவசங்கள், கடன் தள்ளுபடிகள் போன்ற சலுகை அறிவிப்புகளா? என்று கேட்டிருந்தோம். அதற்கு நமது ‘உங்கள் குரல்’ மூலமாக வாசகர்கள் சொன்ன கருத்துகளில் இருந்து தேர்வானவை இங்கே...

மீனாட்சி, திண்டிவனம்

‘ஆர்ப்பரிக்கும் திட்டங்களா, அள்ளிவீசும் சலுகைகளா?’ என்று கேட்டிருக்கிறீர்கள். ‘ஆர்ப்பரிக்கும் திட்டங்கள்’ என்ற வார்த்தைக்குப் பதில், ‘அவசியமான திட்டங்கள்’ என்று போட்டிருக்கலாம். அள்ளிவீசும் சலுகை என்பது அன்று காலையில் செய்த உணவு மாதிரி. வீணாகவும் போகலாம். எல்லாரும் சாப்பிட்டதும் காணாமலும் போகலாம். அவசியமான திட்டங்கள் என்பது நாம் சேமித்து வைக்கும் தானியங்கள் போன்றது. இந்தத் தேர்தலில் நிறைய பேர் சலுகைகளை எதிர்பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். கட்சிகளும் அதைப் புரிந்துகொண்டே சலுகைகளை அள்ளி வீசுகின்றன. இது மக்களை வேறு பாதைக்கு கொண்டு செல்லும். மக்களையும், நாட்டையும் முன்னேற்றுகிற அவசியமான நல்ல திட்டங்களே இன்றைய தேவை. சாதி, மத பேதமற்ற, எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்கிற ஒரு அரசியலே தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கே வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

டாக்டர் வி.பி.அம்புலி ராஜா, கவுரவ விரிவுரையாளர், சென்னை

நான் 2000-ம் ஆண்டு முதல் வாக்களித்து வருகிறேன். எனது முதல் தேர்தலில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், உங்கள் பகுதிக்கு முன்னேற்றத்தைத் தரும் திட்டங்களுக்குத்தான் எனது வாக்கு என்று சொல்லியிருப்பேன். கடந்த 4, 5 தேர்தல்களைச் சந்தித்த பிறகு எனது கருத்து மாறிவிட்டது.எனவே, எங்களுக்கு நேரடி பலன் தரும் சலுகைகள், கடன் தள்ளுபடிகளுக்குத்தான் நான் வாக்களிப்பேன்.

அண்ணா அன்பழகன், அன்னரப்பேட்டை

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான வாக்களார்கள் கட்சி, சின்னத்தைப் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள். நிரந்தரமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பதை பெருமையாகவும் கருதுகிறார்கள். இந்த அபிமானம் என்கிற அறியாமை நீண்ட காலமாகவே இங்கிருக்கிறது. மொத்த வாக்காளர்களில் இது 70 சதவிகிதம் இருக்கும். இதைத்தான் வாக்கு வங்கி என்று ஒவ்வொரு கட்சியும் குறிப்பிடுகிறது. இதைத் தவிர அரசியல் சாராதவர்கள் தரும் நடுநிலையான 30 சதவிகித வாக்குகள்தான் மெஜராரிட்டியைத் தீர்மானித்து ஆட்சியை நிர்ணயிக்கிறது.

இந்த நடுநிலையாளர்களில் படித்தவர்கள் திட்டங்களைப் பார்த்தும், பாமரர்கள் உடனடியாகக் கிடைக்கிற இலவச அறிவிப்புகளைப் பார்த்தும் வாக்களிக்கிறார்கள். அதனால்தான் இலவச கலர் டிவி என்று சொன்னதும் திமுக ஜெயித்தது. கிரைண்டர், ஃபேன், மிக்ஸி என்று மூன்றும் தருவதாகச் சொன்னபோது அதிமுக ஜெயித்தது. வளர்ச்சித்திட்டங்களை முழுமையாக உண்மையாக செயல்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும். அதன் மூலம் இலவசப் பொருட்களை அவர்களே சொந்தமாக வாங்கிக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். எனவே, வளர்ச்சித்திட்டங்களைப் பார்த்துத்தான் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்னைப் போல...

சரஸ்வதி செந்தில், பொறையார்

ஆடித் தள்ளுபடி போல தேர்தல்தோறும் கடன் தள்ளுபடிகளும் வழக்கமாகிவிட்டன. இலவச அறிவிப்புடன், ஓட்டுக்குப் பணம் தருவது மக்களை ஏமாற்றக்கூடியது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு அவர்களை அலட்சியப்படுத்தக் கூடியது. இதைப் பல வருடமாக அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளோம். நம் நாட்டை முன்னேற்றும் வளர்ச்சித் திட்டத்துக்குதான் முன்னுரிமை தர வேண்டும். வசதி படைத்தவர்கள் கூட, கடன் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் கூட்டுறவு கடன் வாங்குகிறார்கள். எனவே இதுபோன்ற வாக்குறுதிகளை நீதிமன்றங்களும், தேர்தல் ஆணை யமும் தடை செய்ய வேண்டும். நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வளர்ச்சித் திட்டங்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தேர்தல்கள் நடக்கின்றன. ஆனால், இப்போது போல அந்தக் காலத்தில் சலுகைகளையும், இலவசங்களையும் சொல்லி யாரும் ஓட்டுக் கேட்கவில்லை. பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை, நெய்வேலியில் பழுப்பு நிலக்கரித் திட்டம், எண்ணூர் மின்நிலையம் என்று நிறைய திட்டங்களை நிறைவேற்றினார்கள். அந்தத் திட்டங்கள் இன்றும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. இதுபோன்று தொலை நோக்குத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துபவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

இந்த வார “தேர்தல் திருவிழா” பகுதிக்கான கேள்வி

வாக்காளர்களே நீங்கள் எதற்கு முக்கியத்துவம் தரப்போகிறீர்கள்?

வாக்குப்பதிவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில் ஏற்கனவே தீர்மானித்துள்ளீர்களா? அல்லது கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் கால அதிரடி நடவடிக்கைகளை கவனித்து வாக்குப்பதிவு சமயத்தில்தான் முடிவெடுப்பீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x