Published : 25 Mar 2019 07:00 AM
Last Updated : 25 Mar 2019 07:00 AM
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதால், திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்துள்ளதால், அக்கட்சியின் சின்னமான பம்பரம் அவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதோ ஒரு சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்புதான், நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குகிறது. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிரமம் என்பதால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என விடுதலை சிறுத்தைகள், மதிமுகவை கேட்டுக் கொண்டோம். விசிகதலைவர் என்பதால் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மற்றொரு வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு மதிமுகவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில், வைகோ தனதுமுடிவில் மாற்றம் செய்து கொண்டதை அடுத்து, கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறியதாவது:கணேசமூர்த்தி, கட்சி பொருளாளராகவும் உள்ளார். மாற்றுக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடும் பட்சத்தில், சட்ட சிக்கல் ஏற்படும் என்றே, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர், வேறு கட்சியின் சின்னத்தில் நிற்கும்போதுதான், விதிமீறலாக கருதப்படும். உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவதில் சிக்கல் இருக்காது என்று தெரியவந்தது.
எனவே, கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்கான ‘சி’ படிவம் திமுகவிடம் இருந்து பெறப்பட்டு, 25-ம் தேதி(இன்று) வேட்புமனு தாக்கலின்போது இணைத்து வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மதிமுகவின் இந்த முடிவால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘சாமி’ வரம் கொடுத்தும்..
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிட அனுமதிப்பதா, நிராகரிப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்தந்த தேர்தல் அதிகாரிக்குதான் உள்ளது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அதை ஏற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT