Published : 02 Mar 2019 11:10 AM
Last Updated : 02 Mar 2019 11:10 AM

கோஷ்டி பூசலால் ராமநாதபுரத்தில் திமுக போட்டியிட தயக்கம்: கூட்டணி கட்சிக்கு ஒதுக்க தலைமை ஆலோசனை

ராமநாதபுரம் திமுகவில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தரப்புக்கும், மாவட்டச் செயலாளர் க.முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களை சமாளிப்பதற்காக இந்த முறை ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவது குறித்து தி.மு.க. தலைமை ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதாவது கமுதியைச் சேர்ந்த க.முத்துராமலிங்கம் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சு.ப.தங்கவேலன் ஆதரவாளர்களுக்கும், முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கும் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக கடந்த டிசம்பர் மாதம் முதுகுளத்தூரில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் நாற்காலிகளை வீசி மோதிக் கொண்டனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து தி.மு.க. தொண்டர்கள் கூறியதாவது:கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் முகம்மது ஜலிலுக்கு சு.ப. தங்கவேலன் தரப்பினர் வேலை செய்யவில்லை.

இதனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா சுமார் ஒண்ணே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. இப்போது இருக்கும் நிலையில் யாருக்கு சீட் கொடுத்தாலும் கோஷ்டி அரசியல் நடத்தி கட்சியை வீழ்த்தி விடுவார்கள். இதனால் ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவது குறித்து தலைமை ஆலோசனை நடத்தி இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றது. இந்த முறை துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை வேலூரில் நிறுத்த விரும்புகிறார். வேலூரில் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டால் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்படலாம் அல்லது மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றனர்.

ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக திமுக அனுதாபியான எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் இயக்குநர் நவாஸ் கனி போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறார். அதே சமயம் மனித நேய மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்காக ராமநாதபுரத்தை ஒதுக்க தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x