Published : 16 Mar 2019 06:49 PM
Last Updated : 16 Mar 2019 06:49 PM
மதுரை மண்டலத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அதிமுகவும் இந்தப் பகுதியில் 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கு தினகரனின் அமமுக கணிசமான வாக்குகளைப் பெறும் என கருதப்படுவதால் இரு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாகவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி கொண்ட பகுதி. அதேசமயம் திமுக சரியான போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு வாக்கு வங்கியுடன் விளங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் என 6 தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வென்றுள்ளது.
எனினும் 2016ம்- ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 36 சட்டப்பேரவைத் தொகுதிகளில், அதிமுக தனித்துப் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக 12 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில், மதுரையில் 1,97,436 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதேசமயம் மதுரை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2016-ம் ஆண்டு தேர்தலில், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வென்றது. மதுரை கிழக்கு, மதுரை மத்திய தொகுதிகளில் திமுக வென்றது.
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், திண்டுக்கலில் 1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் உதயகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளில் அதிமுகவும், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளில் திமுகவும் வென்றன.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தேனியில் அதிமுக 3,14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் (எஸ்சி), ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் (எஸ்சி) என 6 தொகுதிகளிலும், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவே கைப்பற்றியது. அதுமட்மின்றி இந்தத் தொகுதிகளில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது.
சிவகங்கையில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக 2,25,144 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. அதேசமயம், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்தத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில், சிவகங்கை தொகுதியில், திருமயம், ஆலங்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் திமுகவும், காரைக்குடியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வென்றன. சிவகங்கை, மானாமதுரை (எஸ்சி) தொகுதிகளில் அதிமுக வென்றது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் அதிமுகவின் அன்வர் ராஜா 1,19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ம் சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம், திருவாடனை, அறந்தாங்கி, பரமக்குடி (எஸ்சி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. திருச்சுழி தொகுதியில் திமுகவும், முதுகுளத்தூர் தொகுதியை அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வென்றன.
விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 1,45,551 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வென்றது. அதேசமயம். சிவகாசி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளையும் அதிமுக வென்றது.
மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரையில் அதிமுக - திமுக என இரு அணிகளும் சமீபகாலம் வரையில் ஒரளவு சம பலத்துடன் இருந்து வருகின்றன. ஆனால் தினகரனின் அமமுக இந்தப் பகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதிமுகவின் வாக்குகளை அமமுக குறி வைத்தாலும், அதன் எதிர் நிகழ்வாக திமுக தரப்பு வாக்குகள் வேறு அணிக்கு செல்லுமா அல்லது அதிமுக மற்றும் திமுக தங்கள் வாக்குகளைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரையில் திமுக பெரும்பாலான தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 5 தொகுதிகளையுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. திண்டுக்கல் தொகுதியில் மட்டும் திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இன்னமும் தொகுதி ஒதுக்கீடு முடிவாகவில்லை. இருப்பினும் உத்தேசப் பட்டியலில் கூட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கும், விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் மற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. மதுரை மண்டல வாக்குகள் பிரிந்து போகும் ஆபத்து இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளே மதுரை மண்டலத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT