Last Updated : 23 Mar, 2019 04:37 PM

Published : 23 Mar 2019 04:37 PM
Last Updated : 23 Mar 2019 04:37 PM

புல்வாமா தாக்குதல் ஓர் அசம்பாவிதம்; ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி: எச்.ராஜா பேட்டி

சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் மட்டும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாகவும் சுதர்சன நாச்சியப்பனுக்கு கொடுக்கப்பட்டலாம் என்றும் கூறப்படுகிறது.

சுதர்சன நாச்சியப்பனின் உறவினர் மாணிக்கம் தாக்கூருக்கு விருதுநகர் தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால் ஒரே குடும்பத்தில் இரு வேட்பாளர்கள் கூடாது. எனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் எனது ஆதரவாளர் கே.எஸ்.அழகிரிக்கு அந்த சீட்டைத் தர வேண்டும். இல்லாவிட்டால் ராகுல் காந்தியே போட்டியிடட்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் அழுத்தம் தருவதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகங்கை தொகுதி நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்க்கும் இச்சூழலில் 'இந்து தமிழ் திசை'க்காக பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை அணுகினோம். தனது வெற்றி உறுதி என்று கூறியவர் புல்வாமா தாக்குதல், அதிமுக கூட்டணி, ஸ்டெர்லைட் என பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

சிவகங்கையில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

எனது வெற்றி வாய்ப்பைப் பற்றி எனக்கு கவலையே இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் 4, 75,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வென்றார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக இருந்த நான் 1,33,763 வாக்குகள் பெற்றேன். இந்த இரண்டையும் கூட்டினால் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வரும். காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைக் கூட்டினால் 3 லட்சம்தான் வரும். இந்தக் கணக்கு ஒன்றே போதும். இப்போது அதிமுக - பாஜக கூட்டணியின் வேட்பாளராக நான் களமிறங்கும்போது வெற்றி வாய்ப்பைப் பற்றி எனக்கு கவலையில்லை. வெற்றி நிச்சயமாக எங்களுக்குத் தான். அதிமுக - பாஜக கூட்டணி மிகவும் இணக்கமான கூட்டணி. பரஸ்பரம் மரியாதை கொண்ட கூட்டணி.

திமுகவை மதிமுக விமர்சித்த விதத்தை, விமர்சனத்துக்குப் பயன்படுத்திய வார்த்தைகளை மறந்திருக்கமாட்டீர்கள். அப்படிப்பட்டவரோடு மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்.

ஊழல் ஒழிப்பு, அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை என்பதே உங்கள் கொள்கை. நீங்கள் எப்படி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைச்சர்கள் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறீர்கள்?

இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றிலுமாக தள்ளுபடி செய்கிறேன். தேசத்தின் பாதுகாப்பு, அரசாங்கத்தின் நீடித்த நிலைப்புத்தன்மை இவற்றை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டணி உருவாகியிருக்கிறது. தேச நலனில் அக்கறை கொண்ட கூட்டணி இது. கூட்டணிக் கட்சிகள் ஒன்றின் மீது மற்றொன்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.

கஜா புயல் பாதிப்பின்போது ஒரே வாரத்தில் தஞ்சையில் மின் விநியோகம் சீரானது. அப்படிப்பட்ட வலுவான மக்கள் அரசாங்கம் அதிமுக. மாநில அரசின் மீது உள்ள நம்பிக்கையால் உருவான கூட்டணி இது.

அதிமுகவில் பிரச்சினை இல்லை. ஆனால், இங்கே எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 1000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுவிட்டன. எல்லாம் யார் நடத்தியது? மக்கள் அதிகாரம் போன்ற சின்னச் சின்ன அமைப்புகள் நடத்தியவை. அவற்றின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது திமுக. இது திமுகவுக்கு ஆபத்தானது.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு டிஃபன்ஸ் காரிடாரைத் திறந்து வைக்க வரும்போது இவர்கள் 'கோ பேக் மோடி' என கோஷமிடுகிறார்கள். அந்த ராணுவப் பூங்காவால் தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகவுள்ளது. தமிழக இளைஞர்களின் நலன் மீது அக்கறை இருந்திருந்தால், பூங்கொத்து வேண்டாம் ஒரு ஒற்றை ரோஜாவுடன் பிரதமரை ஸ்டாலின் வரவேற்றிருப்பார்.

அதைவிடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு என எல்லாவற்றிற்கும் சிறு சிறு அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் செய்து மாநில அரசைக் கவிழ்க்கும் சதியில் இறங்கியுள்ளது திமுக. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற பதற்றம் மட்டுமே இருக்கிறது.

அப்படியென்றால் தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட்டால் எந்த பாதிப்புமே இல்லை என்கிறீர்களா?

எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது தவறானது என்கிறேன்.

சரி, ஸ்டெர்லைட் ஒரு பிரச்சினையே இல்லை என்றால், தூத்துக்குடியில் உங்கள் கட்சி வேட்பாளர் தமிழிசையின் வெற்றியும் உறுதியா?

தூத்துக்குடி மக்கள் முன்னால் டெல்லி திஹாரில் பல மாதங்கள் இருந்த கனிமொழி, கறைபடியா கரங்கள் கொண்ட எங்கள் வேட்பாளர் சகோதரி தமிழிசை என இரண்டு முகங்கள் பிரதிபலிக்கும்போது அவர்கள் நிச்சயமாக தமிழிசையைத் தான் தேர்வு செய்வார்கள்.

பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளிலுமே தாமரை மலருமா?

5 தொகுதிகள் மட்டுமல்ல புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் பிரதமர் களமிறங்குவதாகவே நாங்கள் பார்க்கிறோம். எங்கள் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அப்படி எண்ணித்தான் களப்பணி ஆற்ற வேண்டும் என சொல்லியிருக்கிறார். 40 தொகுதிகளிலும் மோடிக்காக வாக்கு சேகரிப்போம்.

மோடி மீண்டும் வேண்டும் என்பதற்கு 3 காரணங்களை 1,2,3 என வரிசைப்படி பட்டியிலட முடியுமா?

ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. 3 காரணங்களை வரிசைப்படி சொல்கிறேன்.

1. மோடி அரசுக்கு முன்னால் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு திசையில்லாமல் இருந்தது. மோடி ஆட்சி அமைத்த பிறகுதான் மத்தியில் உறுதியான அணுகுமுறை கொண்ட அரசு உருவாகியிருக்கிறது. மத்தியில் நிலவிய கொள்கை முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி. அதனால் அவரது அரசே தொடர வேண்டும்.

2. மத்திய அரசின் திட்டங்கள் ஜன்தன், ஸ்வச் பாரத், மெகா ஆயுள் காப்பீடு திட்டம் என ஒவ்வொன்றும் ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. மோடி அரசு ஏழை மக்களின் நலனை மையப்புள்ளியாகக் கொண்டே நலத்திட்டங்களை வகுக்கிறது. அதனால் மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.

3.மூன்றாவதாக தேசப் பாதுகாப்பு. மோடி ஆட்சியில்தான் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஓர் உதாரணம் சொல்கிறேன். கடந்த 2009 நவம்பர் 11-ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது 200 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இதே விமானப்படை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த அனுமதி கேட்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு உறுதியான முடிவெடுக்க முடியாமல் தோற்றுப்போனது.

ஆனால், பாஜக அரசு முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. முதல் தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே பாலகோட்டில் நடத்தப்பட்டது. இப்படி பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத மோடியின் ஆட்சி அவசியமாகத் தொடர வேண்டும்.

இங்கேதான் இன்னொரு கேள்வி எழுகிறது.. பிரதமர் நான் காவலர் என்கிறார், நீங்கள் அனைவரும் அந்த முன்னொட்டைச் சேர்த்துள்ளீர்கள். தேசத்தின் காவலராக பிரதமரே இருக்கும்போது எப்படி புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்?

அமெரிக்கா மிக வலிமையான ராணுவ பலம் கொண்டது. கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் கொண்டது என்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால், எப்படி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது? எப்படி அவர்களின் ராணுவ தலைமையகமான பென்டகன் தாக்குதலுக்கு உள்ளானது? அது ஒரு அசம்பாவிதம். அப்படித்தான் புல்வாமா தாக்குதலும் ஓர் அசம்பாவிதம்.

ஆனால், அந்த அசம்பாவிதத்தின் மீது நம் அணுகுமுறையே முக்கியமானது. அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணிலேயே ஒசாமா பின் லேடனை வீழ்த்தியது. அப்படித்தான் புல்வாமா தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது.

அமெரிக்க மக்களோ, பத்திரிகையாளர்களோ ஒசாமா பின் லேடன் பிணத்தை கண் முன் காட்டினால்தான் நம்புவோம் என்று சொல்லவில்லை. ஆனால், பாலகோட் தாக்குதலுக்கு இங்கு சிலர் இன்னமும் ஆதாரம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் நம்புகிறேன். அதனால்தான் நானும் ஒரு சவுகிதார் என்கிறேன்.

ராகுல் காந்தியின் சென்னை கலந்துரையாடல், நாகர்கோவில் பொதுக்கூட்டப் பேச்சு.. இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ராகுல் காந்தி இனிமேல் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து இதுபோன்று பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ராகுல் காந்தியின் தெளிவின்மை பாஜகவுக்கு வாக்குகளாக மாறும். ராகுல் அதிகம் பேசப் பேச மோடியா? ராகுலா என்ற குழப்பம் குறைந்து கொண்டே வரும்.

மக்கள் நினைப்பது இருக்கட்டும், இந்தத் தேர்தலில்  மோடியா? ராகுலா? என்ற போட்டியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு தலைவராக தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டவருக்கும் (மோடிக்கும்) பக்குவமடையாத முதிர்ச்சியற்ற அரசியல்வாதி (ராகுலுக்கும்) இடையேயான போட்டியில்லாத போட்டியாகப் பார்க்கிறேன்.

அந்த 15 லட்சம் ரூபாய் பற்றி இப்போதும் மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே?

அதைப் பற்றி நான் நிறைய முறை சொல்லிவிட்டேன். மோடி மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாகச் சொல்லவே இல்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இப்போதும் இருக்கிறது.

"வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு வருவேன்.  உங்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தும் அளவுக்கு வெளிநாடுகளில் கறுப்புப் பணம் முடங்கியுள்ளது. அப்படி என்றால் அதனைக் கொண்டு எத்தனை ரயில்வே பாதைகளை அமைக்கலாம்? எத்தனை இடங்களில் சாலைகளை அமைக்கலாம்? எவ்வளவு பள்ளிக்கூடங்களைக் கட்டலாம்?" என்றுதான் பேசினார். மக்கள் புரிதலுக்காக அவர்களின் வங்கிக் கணக்கை ஒப்பிட்டுச் சொன்னார். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

தேமுதிகவின் சுதீஷ் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம்பெறவே பாஜகதான் காரணம். எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி தான் காரணம் எனக் கூறிவருகிறார். கட்சியின் தேசியச் செயலராக அந்த ரகசியம் என்னவென்று சொல்ல முடியுமா?

அந்த ரகசியம் பற்றி எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x