Published : 08 Mar 2019 08:49 AM
Last Updated : 08 Mar 2019 08:49 AM

தவறான சமன்பாடுகளுடன் தேர்வுக்குத் தயாராகும் தேமுதிக

தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி பேரங்களின் தரம் குறைந்துகொண்டேபோவதை உணர்த்துகின்றன சமீபத்திய அரசியல் நிகழ்வுகள். குறிப்பாக, எல்லா திசைகளிலும் கூட்டணிக்கான சமிக்ஞைகளைப் பரப்பிவிட்டு, ‘நிபந்தனை’கள் ஏற்றுக்கொள்ளப்படும் அளவைப் பொறுத்து, பேரத்தை இறுதிசெய்யும் பாணியைத் தமிழக அரசியலுக்கு விரிவாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது தேமுதிக. தேர்தல் அரசியலுக்கு வந்து ‘அனுபவம்’ பெற்ற சில காலத்திலிருந்தே அக்கட்சி இதைத்தான் செய்கிறது என்றாலும் இந்த முறை இந்த பாணிக்குப் புதிய வடிவத்தையும் கொடுத்திருக்கிறது.

ஒரே நாளில் பாஜக – அதிமுக கூட்டணியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, திமுகவுடனும் கூட்டணி குறித்துப் பேசியது அக்கட்சியின் நோக்கம்தான் என்ன என்று அரசியல் பார்வையாளர்களையும் மக்களையும் அயர வைத்திருக்கிறது. ஒருபுறம் கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் பாஜகவுடனும், மறுபுறம் கட்சியின் சில நிர்வாகிகள் திமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதெல்லாம் பெரும் அவலம். தேமுதிக நிர்வாகிகள் திமுக கழகப் பொருளாளர் துரைமுருகனுடன் கூட்டணி பற்றிப் பேசவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவரைச் சந்தித்தனர் என்று சொன்னதைத் தமிழகத்தில் குழந்தைகூட நம்பவில்லை. இவ்விஷயத்தில் திமுக நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குரியது. ஆனால், தரம் தாழ்ந்த விதமாக அதற்கு எதிர்வினையாற்றி, தனது அனுபவமின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது தேமுதிக.

அரசியல் எல்லைகளைத் தாண்டி, தனிப்பட்டரீதியிலான பலவீனங்களை ஆயுதமாக்கிக் குற்றம்சாட்டிக்கொள்வதைப் பெரும்பாலும் பரஸ்பர அரசியல் எதிரிகள் தவிர்க்கவே செய்வார்கள். தேர்தல் நேரத்தில்கூட அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், அனுபவமின்மையும், கூட்டணி பேரத்துக்கான ஆயுதம் எனும் அளவில் மட்டுமே அரசியலைக் கருதும் நிலைப்பாடும் தேமுதிகவிடமிருந்து இப்படியான எதிர்வினையை வெளிப்படுத்தியிருக்கின்றன.

திரைமறைவு பேரங்களைப் பொதுவெளியில் சொல்வதன் மூலம், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவது ஒரு தந்திரம். தேமுதிக தலைவர் விஜயகாந்தை, ‘நலம் விசாரிக்க’ சென்றுவந்த திமுக தலைவர் ஸ்டாலினின் நோக்கம் குறித்து, பிரேமலதா வெளிப்படையாகப் பேசியதும், அதிமுகவுடனான பேரத்தை உயர்த்தும் நோக்கிலேயே திமுகவுடன் அக்கட்சி பேரம் பேசிவந்தது என்ற தகவலும் திமுக தரப்பைக் கொந்தளிக்க வைத்துவிட்டன என்கிறார்கள். அதிமுகவுக்கு முன்னதாகவே கூட்டணியை திமுக இறுதி செய்தது, தேமுதிகவுக்குப் புகட்டப்பட்ட மறைமுகப் பாடம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதன் தொடர்ச்சிதான் கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் அரசியல் அவலம்.

2006 சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்ட தேமுதிக, தனித்துப் போட்டியிட்டு ஒரே ஒரு வெற்றியுடன் 8.4% வாக்குகளைப் பெற்றதுதான் இன்றுவரை  அக்கட்சி தொடர்பாக, தேர்தல் நேரத்திலாவது, பிற கட்சிகள் அக்கறை கொள்வதற்கான காரணியாக இருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக துணையுடன் 7.9% வாக்குகள் பெற்று 29 இடங்களில் வென்றாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தே வந்திருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2.4% வாக்குகளைத்தான் பெற்றது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல்களில் தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்ததே இல்லை.

2016 தேர்தலுக்குப் பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி முடங்கிவிட்ட நிலையில், கட்சி கிட்டத்தட்ட செல்லரித்த நிலையில் இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலர் வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டிருக்கின்றனர். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பிரேமலதா – சுதீஷின் குடும்ப அரசியல் எல்லா நம்பிக்கைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துவிட்டது என்ற எண்ணமே மேலோங்கிவருகிறது. இவ்வளவையும் தாண்டி தேமுதிகவுக்கு இப்போது உண்டான மவுசு என்பது, கூட்டணியை வலுவாக அமைக்காவிட்டால் பலத்த போட்டியைச் சந்திக்க நேரிடும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ள ‘பாஜக - அதிமுக’ கூட்டணி, ஒவ்வொரு சதவீத ஓட்டும் முக்கியமானது என்ற வியூகத்தினூடாக இத்தேர்தலை அணுகுவதன் விளைவால் உண்டானது. இதையே துருப்புச்சீட்டாக மாற்றியது தேமுதிக.

இன்றைக்கு ஏதேனும் ஒரு பெரிய கட்சியைச் சார்ந்துதான் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் எனும் சூழலிலும், தேமுதிக இத்தனை முரண்டுபிடிப்பதற்கான முக்கியக் காரணம் அது தன்னிலை மறந்துவிட்டதுதான் என்கிறார்கள். எப்படியும் கூட்டணிக்குள் தேமுதிகவைக் கொண்டுவர எண்ணி, அதற்காகப் பகீரதப் பிரயத்தனம் செய்துவந்த பாஜகவினர், பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியையேகூட அக்கட்சி பொருட்படுத்தாத சூழலில், தூக்கிவீசவும் தயாராகிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜக – அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமகவுக்கு இணையாகத் தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கேட்பதாகவும் செய்திகள் வெளியானாலும் தொகுதிகளுக்கு அப்பாற்பட்ட பேரங்களும் நடப்பதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. “கட்சியைப் பணம் காய்ச்சி மரமாகவே பிரேமலதாவும் சுதீஷும் பார்க்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.

இதற்கிடையே, அதிமுக-பாஜக, திமுக மட்டுமல்லாமல் டிடிவி தினகரனின் அமமுகவுடனும் தேமுதிகவின் பேரம் நடந்திருப்பதாக வெளிவரும் தகவல்கள்  ‘கொள்கை என்றால் என்ன?’ என்று கேட்கும் நிலையிலேயே அக்கட்சி இருப்பதைச் சொல்கின்றன.

இதையெல்லாம் தாண்டிய கேள்வி என்னவென்றால், இனி அதிமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் பாமகவுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் மீதான அதிருப்தியை வெளிப்படையாகப் பேசி, பிரதான கட்சியான அதிமுகவையே அலையவிட்டு, அதிமுக தரப்புக்குத் தலையையும், திமுக தரப்புக்கு வாலையும் காட்டி, இரு தரப்புகள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் தேமுதிகவுடன் ஏனைய கட்சியினர் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதுதான். பேராசைக்கான பலன், தேர்தலுக்கு முன்பே தேமுதிகவுக்குக் கிட்டத் தொடங்கியிருக்கிறது என்றே அரசியல் களத்தில் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். பாவம் விஜயகாந்தும் அவரது தொண்டர்களும்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x