Published : 16 Mar 2019 12:40 PM
Last Updated : 16 Mar 2019 12:40 PM
காங்கிரஸுக்கு அதிக வாக்குவங்கி உள்ள மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி. இத்தொகுதியில் பாஜகவை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் தான் களம் இறங்குவார் என தொடக்கத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தொகுதி அறிவிப்பில் கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தான் என உறுதியாகியுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு செல்வாக்கு மிக்க ஒருவர் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் பலரும் டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் எனக் கூறப்படும் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருப்பதால், தற்போதைக்கு சிதம்பரத்தின் கை ஓங்கி இருப்பதாக கட்சியினர் கருதுகின்றனர். எனவே சிதம்பரம் மூலம் சீட் பெறவும் பலர் முயன்று வருகின்றனர்.
வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று, எச்.வசந்தகுமார் எம்எல்ஏ ஆரம்பம் முதல் தெரிவித்து வருகிறார். அதனோடு தலைமை தெரிவித்தால் நான் போட்டியிட தயார் என தனது ஆசையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன், பொன் ராபர்ட்சிங், மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமார் எம்எல்ஏ போன்றோரும் ரேசில் உள்ளனர். ஆனால், ரூபி மனோகரனுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நம்பும் வகையில், அவர் கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை வரிசையாக சந்தித்து வந்தார்.
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “ பிற தொகுதிகளை விட கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸில் சீட் பெற கடும் போட்டி நிலவுகிறது. யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது, சிதம்பர ரகசியமாகவே உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT