Published : 14 Mar 2019 08:17 PM
Last Updated : 14 Mar 2019 08:17 PM

நாளை நண்பகலில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன் தொகுதிகளை அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளைப் பிரிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி காரணமாக மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தொகுதிகள் குறித்து நாளை நண்பகலில் ஸ்டாலின் அறிவிக்கிறார்.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்திவிட்டன. ஆனால் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்து வருகிறது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக ஓரளவு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதிகள் குறித்து உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

காங்கிரஸுக்கு 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.  

ராகுல் காந்தி சென்னை வருவதற்கு முன்னர் முடித்துவிடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கரூர் தொகுதியைக் கேட்டு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் அதற்காக தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

அதனடிப்படையில் தற்போது பழைய லிஸ்ட்டில் 2  மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை இறுதிப்படுத்தியதால் மற்ற கட்சிகளின் தொகுதியை அறிவிப்பதில் சிக்கல் இல்லாததால் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் நாளை நண்பகல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளையும் திமுக போட்டியிடும் தொகுதிகளையும் அறிவிக்க உள்ளார்.

உத்தேசமாக திமுக கூட்டணியில் மதிமுக 1.ஈரோடு, விசிக 1.சிதம்பரம், 2.விழுப்புரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.மதுரை 2.கோவை.

இந்திய கம்யூனிஸ்ட் 1.நாகை, 2.திருப்பூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1.ராமநாதபுரம், ஐஜேகே 1.பெரம்பலூர், கொங்கு ஈஸ்வரன் 1.நாமக்கல் தொகுதி.

காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2..ஆரணி, 3.திருச்சி, 4.கரூர், 5.சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7.விருதுநகர், 8. தேனி 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் எனத் தெரிகிறது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x