Published : 04 Mar 2019 10:00 AM
Last Updated : 04 Mar 2019 10:00 AM

360: போலிச் செய்திகளுடன் போராடும் சமூக வலைதளங்கள்

போலிச் செய்திகளுடன் போராடும் சமூக வலைதளங்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி, சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. மேலும், சமூக வலைதளங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும் திட்டமிட்டிருக்கின்றன. இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் உலக அளவில் இது தொடர்பான அழுத்தங்கள் எழுந்திருப்பதை அந்நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. கூகுள் தளத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் கட்சிகள், அதற்காக அக்கட்சிகள் செலவழிக்கும் தொகை போன்ற தகவல்களை வெளியிட கூகுள் திட்டமிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழுடன் வரும் கட்சிகளின் விளம்பரங்களை மட்டுமே வெளியிட ட்விட்டர் முடிவெடுத்திருக்கிறது. அதேசமயம், போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதில்லை என்றே தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சமீபத்தில், பேஸ்புக்கில் போலியாகத் தேர்தல் தேதி அட்டவணை பரப்பப்பட்ட விவகாரம் தேர்தல் ஆணையத்தைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது!

புதியவர் பிரதமராவார்: அகிலேஷ் ஆரூடம்

தேர்தல் கூட்டணிகளே இறுதியாகாத நிலையில், பிரதமராவது தொடர்பாக ஆளுக்காள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

“பிரதமராகும் விருப்பம் எனக்கில்லை, கிங் மேக்கராகவும் விரும்பவில்லை, ஆனால் அடுத்த பிரதமரை உருவாக்குவதில் பங்களிப்பு செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். டெல்லியில் நடந்த ஊடக நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தப் பதிலை அளித்திருக்கிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரிவான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியல் சட்டத்தைக் காப்பதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் உடன்பாடு செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.  “விவசாயிகள், இளைஞர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன; கிராமங்களில் 90% இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். பிரதமர் மோடி தன்னுடைய வாக்குறுதிகளையும் உரைகளையும் சாமர்த்தியமாக மக்களிடையே விற்கிறார், ஆனால் சரக்கு மோசமாக இருந்தால் விளம்பர உத்தியால் ஏதும் சாதித்துவிட முடியாது” என்று பிரதமர் மோடியை ஒரு பிடி பிடித்திருக்கிறார். “புல்வாமாவில் இறந்தவர்களில் அதிகம்பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களுடைய குடும்பங்களுக்குக் கணிசமான நிதியுதவியை அறிவிக்கவில்லை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும்” என்று யோகி ஆதித்யநாத்துக்குக் கொட்டுவைத்தார். “இந்தத் தேர்தலுக்குப் பிறகு நாட்டுக்குப் புதியவர் பிரதமராவார்” என்றும் ஆரூடம் சொல்கிறார் அகிலேஷ்!

கோலியாத்களும் டேவிட்டுகளும்: இரா.செழியன்

செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சி.ஆர்.பட்டாபிராமனை, 1967 தேர்தலில் கும்பகோணம் மக்களவைத் தொகுதியில் தோற்கடித்தார் திமுகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான இரா.செழியன். 20,039 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வென்ற செழியன், எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். சி.ஆர். பட்டாபிராமனோ மூத்த வழக்கறிஞர். 1957 முதல் 1967 வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். திவான் பகதூர் சி.பி. ராமசாமி ஐயரின் மூத்த மகன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். கலை, விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். மெட்றாஸ் கிரிக்கெட் கிளப் நிறுவனர்களில் ஒருவர். அந்தத் தோல்விக்குப் பின்னர் அரசியலிலிருந்தே விடைபெற்றார் பட்டாபிராமன்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x