Published : 19 Mar 2019 10:09 AM
Last Updated : 19 Mar 2019 10:09 AM

ஈரோடு மக்களவைத் தொகுதி: எம்.எல்.ஏ.க்கள் நிர்ப்பந்தத்தால் வேட்பாளரை மாற்றிய அதிமுக

ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிமுக நிர்வாகிகளிடையே போட்டா போட்டி நடந்ததாகவும், இறுதியில் எம்.எல்.ஏ.க்களின் முடிவுப்படி காங்கயம் நகரச் செயலாளர் மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும், காங்கயம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்தவர்களே மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்பி செல்வகுமார சின்னையன், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ், முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிசாமி, காங்கயம் நகர செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இவர்களில் காங்கயம் நகரச் செயலாளரான ஜி.மணிமாறன் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக பிரமுகர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது:அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராகவும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தனது மகன் ரத்தன் பிரித்திவ்வை வேட்பாளராக்க முயற்சி எடுத்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், இளைஞரான ரத்தனுக்கு வாய்ப்பு இல்லை என அதிமுக தலைமை ஆரம்பத்திலேயே மறுப்புத் தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்ததாக தற்போதைய எம்பி செல்வகுமார சின்னையனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள் ளனர். தன் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றதும், தனது ஆதரவாளரான காங்கயம் மணிமாறனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கே.வி.ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிப் பட்டியலில் கே.சி.பழனிசாமி, செல்வகுமார சின்னையன், காங்கயம் மணிமாறன் ஆகியோர் இடம்பெற்றனர். இதில், கே.சி.பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்க கட்சித்தலைமை முடிவு எடுத்தது. இந்த நிலையில், தனது மகனுக்கு வாய்ப்பு வழங்காததோடு, தனது அரசியல் எதிரிக்கு வாய்ப்பு வழங்குவதற்கு கே.வி.ராமலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது விருப்பத்திற்கு மாறாக கே.சி.பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கினால், மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டு விலகுவதாகவும் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவித்துள்ளார். இவருக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசும் ஆதரவு தெரிவித்துள்ளார். இரு எம்.எல்.ஏ.க்களின் தொடர் வலியுறுத்தலால், காங்கயத்தைச் சேர்ந்த மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், என்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமார பாளையம் என நான்கு தொகுதிகளில், அறிமுகம் இல்லாத வேட்பாளராக மணிமாறன் உள்ளதால், கட்சி நிர்வாகிகளிடம் அவரை முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகளிடம் சமரசத்தை ஏற்படுத்த கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x