Last Updated : 18 Mar, 2019 04:44 PM

Published : 18 Mar 2019 04:44 PM
Last Updated : 18 Mar 2019 04:44 PM

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்துக்கு ஏன் அவசியம்?- ஜோதிமணி பேட்டி

மத்திய அரசின் கொடூரப் பிழைகளுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் சரியான பதிலடி எனக் கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் கரூர் தொகுதி ஜோதிமணிக்கு ஒதுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் அவரைத் தொடர்பு கொண்டோம்.

பஞ்சாயத்துராஜ் தொடங்கி அரசியல் அனுபவம் கொண்டவர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டளர், பெண்ணியவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட ஜோதிமணி உள்ளூர் அரசியல் தொடங்கி தேசிய அரசியல் வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பதிலளித்தார்.

காங்கிரஸ் சார்பில் கரூர் வேட்பாளராக நீங்கள் களமிறக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே?

ஊடகங்களில் வரும் செய்திகள், சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவுக் குரல், கரூர் தொகுதியில் அடிபடும் பேச்சை வைத்து நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவாக எனக்காக ஒலிக்கும் ஆதரவுக்குரல் அனைத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான மத்திய வேட்பாளர்  தேர்வுக் குழுவே அதிகாரபூர்வமாக அறிவிக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் நீங்கள் அதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

அதிமுகவில் ஜெயலலிதா இல்லை; திமுகவில் கருணாநிதி இல்லை. இத்தகைய சூழலில் இந்தத் தேர்தல் தமிழகத்துக்கு ஏன், எவ்வளவு முக்கியமானது என நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்தத் தேர்தல் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிக முக்கியமானது. காரணம் இந்திய தேசத்துக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அது எல்லா மொழிகளும், எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா மதங்களும் சரிசமமாக பாவிக்கப்படும் சித்தாந்தம். இந்த அடிப்படைக் கட்டமைப்பை அசைத்துப் பார்க்கும் சித்தாந்தத்தைத்தான் பாஜக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் உதாரணம் சொல்லலாம். கொங்கு மண்டலம் வெப்ப மண்டலம். இங்கு ஆடு, மாடு மேய்த்தல் ஒரு முக்கியத் தொழிலாக இருக்கிறது. கால்நடை வளர்ப்பு இருந்தால் அதற்கான சந்தையும் இருக்கும். அந்த சந்தை வியாபாரம்தான் அந்த மண்டல மக்களின் சந்ததிகளின் கல்வி, திருமணம், குடும்ப மருத்துவம் என அத்துனைக்குமான ஆதாரம். ஆனால், பாஜக என்ன செய்திருக்கிறது? கால்நடைச் சந்தைக்குத் தடை போட்டிருக்கிறது.

தமிழனுக்கு என்றொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆதாரத்தோடு நிரூபிக்க கீழடியில் அகழ்வாய்வு செய்து கூறினால் அதனை ஒடுக்க அகழ்வாராய்ச்சியையே முடக்குகிறது.

இட ஒதுக்கீட்டில், தமிழகம் 69% முறையைப் பின்பற்றுகிறது. ஆனால், புதிதாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% ஒதுக்கீடு அளிக்கிறது. அதுவும் ரூ.8 லட்சம் வருமானம் கொண்டவர்களை ஏழை எனக் குறிப்பிடுகிறது. இது உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தைவிட பழங்குடிகளுக்கான மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டுள்ளது.

மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக குரல் எழுப்பினால் அவர்களை தேசத்துரோகி என முத்திரை குத்துகிறது. நெடுவாசலில் விவசாயிகள் போராடினால் தேசத்துரோகம், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடினால் தேசத்துரோகம், விலைவாசி உயர்வை எதிர்த்தால் தேசத்துரோகம். இப்படி உரிமைப் போராட்டங்களை எல்லாம் தேச விரோதம் என முடக்குகிறது.

நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன மொழி பேச வேண்டும் என எல்லாவற்றையும் இந்த மத்திய அரசு தீர்மானிக்கிறது. பள்ளிகளில் இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது. குலக்கல்வி என மீண்டும் சாதி அடுக்குகளை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.

பாஜக ஆட்சியால், இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக, எனது உரிமைகளைப் பறிக்கும் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த மத்திய அரசைத் தூக்கி எறிய வேண்டும். சுய அரசியல் லாபங்களுக்காக மத்திய அரசு சொல்வதெற்கெல்லாம் தலை ஆட்டும் மாநில அரசை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு இந்தத் தேர்தல் முக்கியமானது.

ராகுல் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறதே? உங்கள் கருத்து?

இரண்டு தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிடுவது நடைமுறையில் இருக்கிறதுதானே? அந்த வகையில் ராகுல் காந்தி தமிழகத்திலும் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஸ்டெல்லா மேரீஸ் கலந்துரையாடல், நாகர்கோவில் பொதுக்கூட்டப் பேச்சு.. இதைத்தான் தமிழக காங்கிரஸ் மேற்கோள் காட்டுகிறது. இது மட்டுமே ராகுல் போட்டியிடப் போதுமானதாக இருக்குமா?

நேரு குடும்பத்துக்கு தமிழக மக்கள் மீது அலாதிப் பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தைதான் ராகுல் காந்தி அண்மையில் தமிழகம் வந்தபோது வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக, வடக்கே இருந்து வரும் அரசியல்வாதிகளுக்கு தென்னகப் பார்வை இருக்காது என்ற கருத்தியல் நிலவுகிறது. ஆனால், நேரு குடும்பத்திலிருந்து வந்த ராகுல் காந்திக்கு தமிழகப் பார்வை, ஆந்திரப் பார்வை, கர்நாடகப் பார்வை, கேரளப் பார்வை, புதுச்சேரி பார்வை எனத் தனித்தனியாக புரிதல் இருக்கிறது. இந்தியாவின் பல அடையாளங்களையும் அதற்குத் தேவைப்படும் அக்கறையையும் ராகுல் ஆழமாக அறிந்திருக்கிறார். அதனால்தான் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என பலரைப் போல் நானும் விரும்புகிறேன்.

மகளிர் இட ஒதுக்கீடு காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது. இங்கு இதுவரை வெளியாகியிருக்கும் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இட ஒதுக்கீடு பெயரளவில் கூட இல்லையே?

இது தேர்தலின்போது மட்டுமே பேசப்பட வேண்டிய பிரச்சினை இல்லை. அதனால்தான், காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மகளிருக்கு அரசியலில் இட ஒதுக்கீடு அளிப்பதைத் தொடங்கிவிட்டது. இளைஞரணி, மகளிரணியில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

"சீட் வேண்டும் என்று கேட்கும் இடத்தில் இருக்காதீர்கள், சீட்டை முடிவு செய்யும் இடத்திற்கு வளருங்கள்" என்று அறிவுரை கூறித்தான் ராகுல் காந்தி எங்களை உற்சாகப்படுத்துவார். அது இன்று எனக்கு நடந்திருக்கிறது. இனி வருங்காலத்தில் நிறைய பேருக்கு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கட்சிகள் பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் இயல்பாக வேலை செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் அதிகப்படியான பெண்கள் அரசியலுக்கு வருவார்கள். அதேபோல் இட ஒதுக்கீடு கட்டாயமானால் நிச்சயமாக 33 சதவீதம் பெண்கள் அரசியல் களம் காணும் சூழல் உருவாகும். அதைத்தான் காங்கிரஸ் வாக்குறுதியாகச் சொல்லியிருக்கிறது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதுமே. அந்தச் சம்பவத்தைப் பற்றி பேசவே நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் நடைபெறும் எல்லாமே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. பொள்ளாச்சி எஸ்.பி. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைத் தெரிவிக்கிறார், 4 பேரைத் தவிர வேறு குற்றவாளிகள் இல்லை என்கிறார்கள், குற்றம் சாட்டப்பட்ட 'பார்' நாகராஜன் சுதந்திரமாக உலா வருகிறார், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் மவுனம் கலைக்கவில்லை, கூட்டணியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. இல.கணேசன் இத்தகைய செய்திகளைப் படிப்பதில்லை என்கிறார். அரசாணையில் பெண்ணின் அடையாளம் வருகிறது. ஆளும் அதிமுகவும், காவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பாஜகவும் இதனை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். அப்புறம் எங்கிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது தயங்காமல் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்புக்கு தனியாக கட்டணமில்லா இலவச அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட வேண்டும். இதில் காவல்துறை, நீதித்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்துறை சார்ந்தவர்களும் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பெண்கள் பாதுகாப்புக்கு நிச்சயமாக உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதியைக் கண்டு ஒடுங்கிவிடக் கூடாது. அதற்கு நானே ஓர் உதாரணம். என் மீது வாட்ஸ் அப் வாயிலாக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளை நான் துணிச்சலாக எதிர்கொண்டேன். அவமானப் பட வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அல்ல வன்முறையாளர்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்திற்கு ஏன் அவசியம்?

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும் அமைவது மிக மிக அவசரம், அவசியம். மக்களும் அந்த மாற்றத்தை நோக்கிதான் காத்துக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் பாஜக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு என கொடூரப் பிழைகளைச் செய்திருக்கிறது. அந்தப் பிழைகளைத் திருத்த, கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படும் நாட்டை முன்னோக்கிச் செலுத்த காங்கிரஸ் ஆட்சி அவசியம். கடந்த 5 ஆண்டுகள் மத்திய அரசியலில் இருண்ட காலம். காங்கிரஸ் தலைமையில் விடிவுகாலம் வர வேண்டும். மத்திய அரசின் கொள்கைகளை எல்லாம் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் மாநில அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை.

தமிழர்களின் உரிமை, உணர்வு சிதையாமல் இருக்க வேண்டுமானால் மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைய வேண்டும்.

தேர்தல் அரசியலில் பணபலம் பிரயோகப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இதனை எப்படி சமாளிப்பீர்கள்?

தேர்தலில் பண பலம் மட்டுமே தான் வெற்றி பெறும் என்றால் மக்களின் முதல் சாய்ஸ் அம்பானி, இரண்டாவது சாய்ஸ் அதானி என்றுதான் இருக்கமுடியும்.

உரிமைகளைப் பறிக்கும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மொழி, இன, தன்மான, சுயமரியாதையை சுட்டுப் பொசுக்கும் அரசியல்வாதிகள் கொடுக்கும் காசை வைத்து மக்கள் தலைவரைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. அதனால், எவ்வளவு பணத்தை வாரி வழங்கினாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x