Last Updated : 19 Mar, 2019 11:23 AM

 

Published : 19 Mar 2019 11:23 AM
Last Updated : 19 Mar 2019 11:23 AM

மதுரையில் ஆதிக்கம் செலுத்திய கம்யூனிஸ்ட் இயக்கம்: சிறையில் இருந்தே ஜெயித்த வரலாறு உண்டு

மதுரையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 1952-ல் நடந்த முதல் சட்டப் பேரவைத் தேர்தலில் சிறையில் இருந்தவாறு பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அன்றைக்கு மதுரையில் மதுரா கோட்ஸ், மீனாட்சி மில் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டன. தொழிலாளர்கள் அதிகரிப்பால் கம்யூனிஸ்ட் இயக்கமும் வேகமாக வளர்ந்தது. மதுரை மக்களவைத் தொகுதியை கம்யூனிஸ்ட் வேட்பாளர் கேடிகே.தங்கமணி முதன் முறையாக 1957-ல் கைப்பற்றினார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு 1967-ல் பி.ராமமூர்த்தி மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஏறக்குறைய 27 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1999-ல் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.மோகன் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் 2004-ல் அவரே மீண்டும் எம்.பி. ஆனார். 2009-ல் அதிமுக கூட்டணியில் மோகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் நிர்வாகி லீலாவதி கொலையைத் தொடர்ந்து தனித்து நின்ற இக்கட்சி வேட்பாளர் பி.மோகன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் பெற்றதால் திராவிடக் கட்சிகள் கூட்டணி சேர முன்வந்த காலமெல்லாம் உண்டு.

இதுவரை 16 முறை நடந்த மக்களவைத் தேர்தல்களில் தங்கமணி, பி.ராமமூர்த்தி, பி.மோகன் ஆகியோர் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். சங்கரய்யா, ஜானகியம்மாள் தலா ஒருமுறையும், நன்மாறன் இருமுறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், மதுரை மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க் சிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. எழுத்தாளர், சிந்தனையாளர் போன்ற அடையா ளத்துடன் சு.வெங்கடேசன் களம் இறங்கி உள்ளார்.

இது குறித்து முன்னாள் எம்எல்ஏ என்.நன் மாறன் கூறியதாவது: மதுரையில் 1919-ல் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் நடவடிக் கைகள் தொடங்கின. 1952-ல் தொழிற்சாலைகள், ரயில்வே தொழிலாளர்கள், மதுரை கிழக்குப் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் இருந்தனர். இது கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு பலம் சேர்த்தது.

கடந்த 1952-ல் காங்கிரசுக்கு எதிரான சதி வழக்கில் கம்யூனிஸ்ட் நிர்வாகி பி.ராமமூர்த்தி மதுரை சிறையில் இருந்தவாறு வேட்பு மனு செய்தார். பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நடிகர்கள் எம்ஆர். ராதா, என்எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் ஆதரவு அளித்தனர். திமுக போன்ற கட்சிகள் போட்டியின்றி ஆதரவு தந்தன. சிறையில் இருந்தவாறே பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். மதுரை நகரசபையில் 1967-ல் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றபோது நகரில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மேலக்கால் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.‘மதுரையைச் சுற்றிய கழுதை வெளியில் போகாது’ எனும் பழமொழி அன் றைக்கே உண்டு. தொழில் வளம், குடிநீர் வசதிகள் தேவைகேற்ப இருந்தன. இதற்கு கம்யூனிஸ்டுகள் பங்களிப்பு அதிகம்.

இக்கட்சி சார்பில் 1967-ல் மதுரை மேற்கில் சங்கரய்யா, கிழக்கில் ஜானகியம்மாள் ஆகியோர் எம்எல்ஏக்கள் ஆகினர். ஜானகியம்மாள் மதுரையைச் சுற்றிலும் கிராமப்புற ஏழைகளுக்கு இலவசப் பட்டா பெற்றுக் கொடுத்தார். 1980-ல் மதுரை கிழக்குத் தொகுதியில் சங்கரய்யா போட்டியிட்டபோது, அவருக்கு எம்ஜிஆரே ஓட் டுக்கேட்டுள்ளார். கடந்த 1999-ல் திமுக கூட்டணியிலும், 2004-ல் அதிமுக கூட்டணியிலும் வெற்றி பெற்ற பி.மோகன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மக்களவையில் முதல் குரல் எழுப்பினார். ரயில்வே விரிவாக்கம், மதுரை அரசு மருத்துவமனையில் மேம்பாடு உட்பட பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தார்.

கடந்த 2001, 2006-ம் ஆண்டுகளில் நான் எம்எல்ஏவாக இருந்தபோது, திருமலை நாயக்கர் மகால் மேம்பாடு, மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி அழகுபடுத்துதல், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நகர் முழுவதும் சின்டெக்ஸ் தொட்டி, ஐ.டி.பார்க், டைடல் பூங்கா போன்ற எண்ணற்ற திட்டங்கள் வந்தன. சவுராஷ்டிராவும், பட்டு நூல் சமூகமும் ஒன்றே என அரசாணை பெற்றுத் தந்தேன். 1952-ல் உருவான தேர்தல் கூட்டணி போன்று தற்போது உருவாகி உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x