Published : 15 Mar 2019 06:05 PM
Last Updated : 15 Mar 2019 06:05 PM

ராகுல் காந்தி கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது ஏன்?- கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி கல்வித்துறை கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 தொடங்கி நடக்க உள்ளது. இதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிரச்சாரம், கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. கடந்த 10-ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 13-ம் தேதி புதன்கிழமை நாகர்கோவிலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்தார் ராகுல். சென்னை வந்த அவர் அதற்கு முன்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல் அதை தனது அரசியல் பிரச்சார மேடையாக மாற்றிக்கொண்டார். பணமதிப்பு நீக்கம், ரஃபேல் விமானக் கொள்முதல், மோடியின் மீதான விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார்.

அவரது பேச்சும், பதிலளித்த விதமும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அவரது பதில் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள், தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்த பின்னர் பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்கிற நடத்தை விதியை மீறியதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து பதிலளித்த அவர் வேறு நிகழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுவிட்டு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தினாலோ, அல்லது ஓர் அரசியல் கட்சி கல்லூரியில் பேசினாலோ விதிமீறல் ஆகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் ராகுலை எம்.பி. என்கிற முறையில் அழைத்துள்ளது. அது விதிமீறல் ஆகாது என தெரிவித்தார்.

இந்நிலையில் கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் இரா. சாருமதி சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''கடந்த 13-ம் தேதி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர் கலந்துகொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ள நிலையில், எவ்வாறு இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்கிற விவரத்தினை உடனடியாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டு இவ்வலுவலகத்திற்கு வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார். இது முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, எம்.பி. என்கிற முறையில்தான் ராகுலை அழைத்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.  
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x