Last Updated : 20 Mar, 2019 09:23 AM

 

Published : 20 Mar 2019 09:23 AM
Last Updated : 20 Mar 2019 09:23 AM

திமுக வேட்பாளர்களில் 33% பெண்கள் இல்லாதது வேதனை- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படாதது வருந்தத்தக்கது, வேதனை அளிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு கி.வீரமணி நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:

திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது ஏன்?

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததது. யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டிய தேர்தல். பணம், பதவி, சாதி, மதம் என எல்லா வெறிகளையும் ஒன்றுசேர்த்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்கொண்டது மோடி தலைமையிலான பாசிச, ஜனநாயகத்துக்கு விடை கொடுக்கக்கூடிய, கொள்கையற்ற கூட்டணி. அதை தோற்கடிக்கவே திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பற்றி என்ன கருதுகிறீர்கள்?

2016-17ல் வேலையில்லா திண்டாட்டம் 3.9 சதவீதம். இது, 2017-18ல் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் எங்கும் வளர்ச்சி ஏற்படவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் மோடி. அதை செய்யவில்லை. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ராமர் கோயில் பிரச்சினையால் எதிர்விளைவுகள் ஏற்படும்என்று கருதி, அந்த திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு ராணுவம் சரியானபதிலடி கொடுத்தது. அந்த வெற்றியை, ஆளுங்கட்சியின் வெற்றியாகக் காட்டிக்கொண்டு, வாக்கு வங்கியை உருவாக்க நினைக்கின்றனர். வெளியுறவுக் கொள்கையில் தோல்வி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படாத வியாபாரிகளே இல்லை. வங்கிக் கடன் செலுத்துவதில் அதானி, அம்பானிக்கு விதிவிலக்கு. டிராக்டர் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் மீது நெருக்கடி. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் பற்றி?

1952-ம் ஆண்டிலேயே வாக்காளர்களுக்கு 2 ரூபாய் கொடுத்தனர். அது அபூர்வமாக இருந்தது. அப்போதுதான் நாட்டிலேயே முதன்முதலாக காங்கிரஸ் இங்கு தோற்றது. அந்த கலாச்சாரம் பூதாகரமாகி, நாடு முழுவதும் மோசமாக பரவியுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

எப்போது பிரச்சாரம் தொடங்கு கிறீர்கள்?

திராவிடர் கழகம் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தனியாக பிரச்சாரம் செய்வோம். யாருடனும் சேர்ந்து பிரச்சாரம் செய்யமாட்டோம். 26-ம் தேதி நாகை தொகுதியில் தொடங்கி, ஏப்ரல் 16-ம் தேதி தஞ்சையில் முடிக்கிறோம். திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற விளக்கங்களுடன் கூடிய புத்தகத்தை ரூ.10-க்கு விற்போம்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தும் திமுக, அதிமுக கட்சிகள், வேட்பாளர்கள் தேர்வில்கூட அதைப்  பின்பற்றவில்லையே?

இது வருந்தத்தக்கது. வேதனை அளிக்கிறது. கட்சிப் பொறுப்புகளில் மகளிர், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான்புதிதாக சாதி, மத அமைப்புகள் உருவாகாது. சமூகநீதி கலந்த பாலின நீதிக்கு இது மிகவும் அவசியம்.

வேட்பாளர்கள் பட்டியலில் வாரிசுகள் இடம்பெற்றிருப்பது பற்றி?

திராவிட இயக்கமே குடும்பம் குடும்பமாக இருப்பதுதான். வாரிசுதாரர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். எதிராளியின் பலத்தை கணக்கிட்டு, அதை முறியடிக்கத்தான் கட்சித் தலைமை திட்டம் வகுக்கும். தவிர, மகன், மகள் என்பதைதகுதிக் குறைவாக கருத அவசியம்இல்லை. மகன், மகளுக்கு முன்னுரிமை என்று அவர்கள் கொள்கைஉருவாக்கவில்லை. மற்றவர்கள் புறக்கணிக்கப்படவும் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருப்பது தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழகத்தில் பாஜகவுக்கு நோட்டாவைவிட கூடுதல் வாக்குகள் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான், சரத்குமார் போன்றவர்கள் தனித்துப் போட்டியிடுவதால் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதே?

நாடகம், சினிமா பார்க்கும்போது கதாநாயகன், கதாநாயகி பற்றிதான் கவலைப்படுவோம். இடையில் வந்து போகிறவர்கள் பற்றியோ, பக்கவாட்டில் நிற்பவர்கள் குறித்தோ ஞாபகம் இருக்காது. அதுபோலத்தான் இவர்களும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x