Published : 20 Mar 2019 12:45 PM
Last Updated : 20 Mar 2019 12:45 PM

அதிமுக தேர்தல் அறிக்கை; ஊழலாட்சியைத் தொடரக் கேட்கும் வாய்ப்பா? வெற்று வாக்குறுதிகளா?

தேர்தல் அறிக்கையை கட்சியின் பிரகடனம் என்பார்கள். ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வேன் என்று கையெழுத்து போடாமலே மக்களிடம் கொடுக்கும் உறுதிமொழியாக தேர்தல் அறிக்கை கருதப்பட்டது. ஆனால் இன்றைய தேர்தல் அறிக்கைகள், இலவசங்களாகவும் கவர்ச்சித் திட்டங்களாகவுமே இருக்கின்றன என்று குரல்கள் எழுகின்றன.

மாநில உரிமைகளுக்காக முழங்கிய ஜெயலலிதா இல்லாமல் அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றி மூலம் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வழிவந்த அதிமுக, தன்னுடைய தேர்தல் அறிக்கையை எப்படி உருவாக்கியுள்ளது?

வெறும் சம்பிரதாய சடங்கு:கே.எஸ்.ராதாகிருஷ்ணன்- திமுக செய்தித்தொடர்பாளர்

உலகிலேயே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்தான் முதன்முதலாகத் தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் 1919 வாக்கில் திலகர் முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். எழுச்சியோடு வெளியான அந்த அறிக்கைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. மக்கள் நலனையே பெரிதாகக் கொண்ட அரசுகள் உருவாகின. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கை சம்பிரதாய சடங்குக்காக வெளியிடப்பட்டதா என்ற ஐயம் ஏற்படுகிறது.

நடைமுறைக்கு உகந்த, மக்களுக்குத் தேவைப்பட்ட வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக மாற்றியது திமுக. ''சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்'' என்பார் கலைஞர். அதேபோல 1989-ல் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். அதைச் செய்தும் காட்டினார்.

விவசாய விளை பொருட்களுக்கு நியாய விலை வழங்கவேண்டும் என்பதற்காக உழவர் சந்தை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட அனைத்தும் கலைஞர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறி, நிறைவேற்றிய திட்டங்களே. திமுக சார்பில் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுவில் பலமுறை இருந்திருக்கிறேன். அப்போது பொருளாதாரத்தில் தொடங்கி உலக அரசியல் வரை அனைத்தும் விவாதிக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

பொதுவாக தேர்தல் வாக்குறுதிகளில் இலக்கணமும் சாரமும் இருக்கும். ஆனால் இன்றைய அதிமுக தேர்தல் அறிக்கையில் வெற்றுச் சொற்களும் வார்த்தை ஜாலங்களுமே இருக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் 'ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்' என்று எல்லோரும் குழந்தைப் பருவத்தில் எழுதும் விடுமுறைக் கடிதம் போல் இருக்கிறது.

ஊழலாட்சியைத் தொடரக் கேட்கும் வாய்ப்பு: ஜீவசுந்தரி -வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்

ஆளும் அதிமுக அரசைப் பார்த்துக் கேட்கிறேன். இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்? சேலம் எட்டுவழிச் சாலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, மீத்தேன் திட்டம் என மக்கள் விரோத ஆட்சியைத்தானே செயல்படுத்தினீர்கள். நீதிமன்றத்தின் அனுமதியோடு பரிசுப் பணம் கொடுத்தீர்கள், இப்போது 1,500 ரூபாயைத் தூக்கிப் போட்டு மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

உங்களின் கூட்டணிக் கட்சிதான் (பாஜக) விவசாயிகளுக்கு ரூ.6,000 கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. 6 ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு? தலைநகரத்துக்குக் கால் தேய நடந்தார்களே விவசாயிகள், அப்போது ஏன் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை?

ஆட்சியில் இருந்துகொண்டே தேர்தலின்போது மட்டும் மக்கள் நலனை வலியுறுத்துவீர்கள் என்றால் நீங்கள் யார்? மத்திய அரசுடன் இத்தனை நெருக்கமாக இருந்துகொண்டு ஏன் உங்களால் எதையும் இவ்வளவு நாட்களாகச் செய்யமுடியவில்லை?

விழிப்புணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. மலிந்திருக்கும் ஊழலாட்சியைத் தொடர தேர்தல் அறிக்கை மூலம் மீண்டும் வாய்ப்பு கேட்பதாகவே இதைப் பார்க்கிறேன்.

தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது: ஆழி செந்தில்நாதன்எழுத்தாளர், சமூக ஆர்வலர்

''அதிமுக அறிக்கையில் எதுவும் வாக்குறுதிகளாகவோ, திட்டவட்டமாகவோ இல்லாமல் அனைத்துமே மேம்போக்காக உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் மாநில உரிமைகளை முன்னிறுத்துவதுதான் முக்கியம். ஆனால் இங்கு எதுவுமே குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என்கின்றனர். ஆனால் அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் பாஜக என்றுமே நீட் தேர்வை ரத்து செய்யப்போவதில்லை. 'அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம்', 'எம்ஜிஆர் தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்' ஆகிய இரண்டுமே காலம்காலமாக அனைத்துக் கட்சிகளும் வறுமை ஒழிப்புக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அளிக்கும் வாக்குறுதிகள். திட்டத்தின் பெயர் மட்டும் அதிமுகவுக்கு ஏற்றவகையில் மாற்றப்பட்டிருக்கிறது.

எழுவர் விடுதலையில் ஆளுருக்கு உரிய ஆணைகளைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவரிடமும் மத்திய அரசிடமும் வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருப்பதை வேண்டுமானால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.

மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு, மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணியில் இருந்தவாறே இத்தனை நாட்களாக எதையும் செய்யாமல், இனி அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வது அடிப்படையிலேயே சரியான வாதம் கிடையாது. 100% அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்றாலும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை. அதிமுக பேசுவதற்கும் செய்வதற்கும் நிறைய இடைவெளிகள் இருக்கின்றன. எந்த நியாயமும் இல்லாமல், அடிப்படை அரசியல் நேர்மைக்குப் புறம்பாக அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.

இங்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் திராணி இல்லாததால்தான் வலியுறுத்துவோம் என்றும் முயற்சிப்போம் என்றும் அதிமுக கூறியுள்ளது. இந்தியில் ஒரு வார்த்தை உண்டு. 'ஜும்லா' - வெற்று வாக்குறுதிகளை அள்ளிவிடுவது. இதற்கு வாக்காளர்கள் மத்தியில் எந்தத் தாக்கமும் இருக்காது என்பது நிதர்சனம்'' என்கிறார் செந்தில்நாதன்.

சுயாட்சிக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி தமிழகம். அதை முன்னெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும். அண்ணா பெயரிலும் ஜெயலலிதாவின் வழியிலும் செயல்படும் அல்லது அவ்வாறு கூறிக் கொள்ளும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் காத்திரமான உறுதிமொழி எதுவும் இல்லாமல் 38 வாக்குறுதிகளில் '103' வலியுறுத்தல்கள் மட்டும் இருப்பது ஆகச்சிறந்த நகைமுரணா அல்லது தமிழகத்தின் அவல நிலையா?

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

"ஜெயலலிதா அம்மாவைச் சுமப்பதில் பெருமை": 'நகை' கற்பகம்

"ஜெயலலிதா அம்மாவைச் சுமப்பதில் பெருமை": 'நகை' கற்பகம் 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x