Published : 22 Mar 2019 08:33 AM
Last Updated : 22 Mar 2019 08:33 AM

தேர்தலில் போட்டியிட சாமானியர்களுக்கு வாய்ப்பில்லையா?

ஒடிஷாவில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரான பிரமிளா பிசோய் என்பவருக்கு மக்களவைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் நவீன் பட்நாயக். அதுவும், தான் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு வென்ற அஸ்கா தொகுதியில். ஒரு அரசியல் கட்சி தனக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதியில் சாமானியரைத் தேர்தலில் களமிறக்குகிறது. ஏன் இப்படியொரு வாய்ப்பைத் தமிழக அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் சாமானியர்களுக்கு வழங்கவில்லை என்ற கேள்வியெழுகிறது.

பெண்களுக்குப் போதிய விகிதாச்சாரம் இல்லை, தலித்துகளுக்குத் தனித் தொகுதிகளை மட்டுமே ஒதுக்குகிறார்கள், சிறுபான்மையினருக்கு வாய்ப்புகளே வழங்கப்படவில்லை என்று திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் மக்களவை வேட்பாளர் பட்டியலுமே கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. அதைப் போலவே எளிய பின்னணியிலிருந்து கட்சிப் பணியாற்றுபவர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

எதிர்த்திசையில் செல்லும் திராவிடக் கட்சிகள்

பெருநிலவுடைமையாளர்களின் அரசியல் முகமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சாமானியர்களைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைத்து ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தியதுதான் திராவிடக் கட்சிகளின் சாதனை. ஆனால், அதன் இன்றைய தலைவர்கள் மீண்டும் பணக்காரர்களிடமே அரசியலைக் கொண்டுசேர்க்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. முன்னோக்கிய அந்தப் பயணம் இப்போது பின்னடைவை அல்ல; எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்திருப்பது வேதனை. திமுக தொடங்கப்பட்டபோது அண்ணா முதற்கொண்டு அதன் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் பலரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதிமுக தொடங்கப்பட்டபோதும்கூட அதன் தொண்டர்கள் அதே எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலகட்டங்களில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு சாமானியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே பின்பற்றினார்கள். அப்படித்தான் இன்றைக்குத் திமுகவில் துரைமுருகன் தொடங்கி ஆ.ராசா வரைக்கும் அதிமுகவில் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வரைக்கும் வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள்.

கடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர் தலிலும்கூட திமுக சார்பில் அக்கட்சியின் பகுதிச் செயலாளரான என்.மருது கணேஷ் போட்டியிட்டார். தொகுதியெங்கும் பண மழை பொழிந்ததால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால், ஒரு கட்சி ஊழியருக்கு மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தியை திமுக தெளிவாக உணர்த்தியது. ஜெயலலிதா இன்னும் ஒரு படி மேலே போய், தனது காலம் முழுவதிலும்  தேர்தல்தோறும் ஒரு சாமானியருக்கு வாய்ப்பு வழங்குவதைத் தேர்தல் வெற்றிக்கான ஒரு உத்தியாகவே கையாண்டார்.  ஒவ்வொரு முறை வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போதும் எதிர்பார்க்க முடியாத வகையில் எளிய பின்னணி கொண்டவர்களை அவர் களத்தில் இறக்கிவிட்டார். உள்கட்சி ஜனநாயகத்துக்குப் பெரியளவில் வாய்ப்பில்லாத கட்சி என்றாலும்கூட சாமானியர்களுக்கு வாய்ப்பு வழங்குகிற கட்சி என்ற அடையாளத்தை அதிமுக தக்கவைத்துக்கொண்டதும் அதன் வெற்றிக்கு ஒரு காரணம்.

காமராஜருக்கும் கக்கனுக்கும் இன்று இடமிருக்கிறதா?

நிலவுடைமையாளர்களாகவும் பெருமுதலாளி களாகவும் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்ட காங்கிரஸ், ஆளுங்கட்சியாக இருந்த காலக்கட்டத் திலும்கூட, காமராஜருக்கும் கக்கனுக்கும் அங்கே இடமளிக்கப்பட்டிருக்கிறது. அதே காலத்தில்தான், வசதிபடைத்த குடும்பப் பின்னணியிலிருந்து மோகன் குமாரமங்கலம், கே.டி.கே.தங்கமணி போன்றவர்கள் பொதுவுடைமை இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாக எளிய வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அங்கேயும்கூட, ஏழைத் தொழிலாளிகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், வெளிநாடுகளுக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பியவர்களும் ஒரே மதிப்புநிலையில்தான் அணுகப்பட்டார்கள். இப்போது பொதுவுடைமை இயக்கங்களில் அந்நிலை தொடர்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். ஆனால், அதற்கான வாய்ப்பும் நம்பிக்கையும் மிச்சமிருக்கவே செய்கிறது. ஆனால், தனக்கே உரிய தனிப்பெருமையை திராவிடக் கட்சிகள் இந்தத் தேர்தலில் இழந்துநிற்கின்றன.

சாமானியர்கள் வாக்களிக்க மட்டும்தானா?

பல்கலைக்கழகப் பட்டங்களோடு அரசியலுக்குள் அடியெடுத்துவைக்கும் அறிவுஜீவிகள், கட்சிப் பணிக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொண்டர்கள் என்று இரண்டு பிரிவினருக்கும் சம வாய்ப்புகளை வழங்கிவந்த திராவிடக் கட்சிகள் இந்தத் தேர்தலில் இரண்டையும்விடப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்களையே பெரும்பாலும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. தேர்தல் என்பது இனி சாமானியர்களுக்கானது அல்ல; தொழிலதிபர்கள், கட்சித் தலைவர்களின் வாரிசுகள் என்று செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டும்தானா? நாட்டில் வாழும் சரிபாதிக்கும் மேலானவர்கள் இன்னும் வறியநிலை வாழ்க்கையைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் மட்டும் தானா? உள்ளூர் அளவில் வாக்குகளைச் சேகரித்துத் தரும் கட்சி ஊழியர்களின் பணி என்பது முகவர்கள் என்ற நிலையிலேயே முடிந்துவிடுகிறதா?

வட இந்தியாவில் மன்னர்களின் வாரிசுகள் மக்களாட்சியில் பிரதிநிதிகளாகத் தொடர்கிறார்கள். தென்னகமே சாமானியர்களின் பிரதிநிதிகளைச் சட்டமியற்றும் அவைகளுக்கு அனுப்பிவைத்து சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இன்றைக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்திருப்பதற்குக் கட்சித் தலைவர்களின் வாரிசுகளே தொடர்ந்து முன்னிறுத்தப்படுவதும் ஒரு காரணம். பாஜகவின் வளர்ச்சிக்கும்கூட நிச்சயம் அது ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸைத் தோற்கடித்து மாநில ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு அதுவே பாடமாக இருக்கட்டும்.

- செல்வ புவியரசன்

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x