Published : 29 Mar 2019 09:51 am

Updated : 29 Mar 2019 09:51 am

 

Published : 29 Mar 2019 09:51 AM
Last Updated : 29 Mar 2019 09:51 AM

ஓபிஎஸ் மகன் மீது ஸ்டாலின் நடத்திய ‘தாக்குதல்’: தேனி மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி

அதிமுக வேட்பாளரின் செயல் பாடுகள் ஸ்டாலின் பிரச்சாரத்தில் பிரதானமாக இடம் பெற்றது. இது பிரச்சாரக் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, மனு தாக்கல், பிரச்சாரம் தொடக்கம் என்று அனைத்திலும் அதிமுக தான் முதலில் களத்தில் குதித்தது. ஓ.பன்னீர்செல்வம் மகன் என்ற அடையாளத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரவீந்திரநாத்தின் பேச்சுகள் பரவலாக சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.


பிரச்சாரத்தில், செயல்படுத்த உள்ள திட்டங்களைப் பிரதானப் படுத்தாமல் எதிர்நிலையில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவரை டெபாஸிட் இழக்கச் செய்வேன், வெளியூரில் இருந்து வந்தவர் என்று வசைபாடத் தொடங்கி உள்ளார். இப்பேச்சுக்களை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை.

தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்து வரும் அவரை நிலைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் வருகை அமைந்துவிட்டது. பெரியகுளம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், சாதனைகளையும், திட்டங்களையும் குறித்துப் பேசுவதுதான் வேட்பாளருக்கு அழகு. பிஞ்சிலே பழுத்ததைப் பற்றி நானும் சொல்வேன். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் விஷயமும் தெரியும். சினிமா தொடர்புகள் குறித்தும் நன்கு அறிவேன். என்னுடன் விளையாட வேண்டாம் என்று எதிர் வேட்பாளரின் ‘செயல்பாடுகள்’ குறித்து கோடிட்டுக் காண்பித்தார்.

அடுத்து பேசிய ஸ்டாலின், ரவீந்திரநாத்துக்கு ஓபிஎஸ் மகன் என்ற தகுதியைத் தவிர மறைமுகத் தகுதிகள் சில இருக்கலாம். அவற்றை இந்த மேடையில் பகிரங்கமாக சொல்ல முடியாது என்று நாசூக்காகக் கூறிவிட்டுச் சென்றார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே ரீதியில் தேனி, ஆண்டிபட்டியிலும் இவர்களது பேச்சுக்கள் இருந்தன. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களின் தன்மையும், செயல்பாடும் கவனிக்கத்தக்க அம்சங்களாக இருக்கும். தங்கள் இமேஜைத் தக்கவைக்க திரைக்குப்பின் நடைபெறும் விஷயங்களை மறைத்து கம்பீரமாக வலம் வருவர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரின் செயல்பாடு குறித்த தகவல்கள் அக்கட்சியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது:ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். ஆனால் அவரது மகன் சட்டென்று தேர்தலில் போட்டியிட வந்துள்ளார். பக்குவமும், பேச்சுத்தன்மையும் அவருக்கு கைகூடவில்லை. தேர்தல் நேரத்தில் எதிர் அணியினரைத்தாக்கிப் பேசுவது வழக்கம்தான். ஆனால் மூத்த தலைவர் என்ற கோணத்தில் இந்த விஷயத்தை மென்மையாகக் கையாண்டிருக்க வேண்டும். அவரது பேச்சுக்குப் பதிலடியாகத்தான் ஸ்டாலின் பிரச்சாரம் அமைந்தது. முதல்முறையாக அதிமுக வேட்பாளரின் செயல்பாடு குறித்து நாசூக்காகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். இது தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

இதுவரை இயல்பாகச் சென்ற பிரச்சாரம் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தேர்தல் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், அரசியலில் யாரும் புனிதர்கள் கிடையாது. எதிர் அணியினரின் மறைமுக விஷயங் கள் எங்களுக்கும் தெரியும். தனிப்பட்ட விமர்சனங்களை இத்தோடு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாங்களும் சில தகவல்களை வெளியில் சொல்ல வேண்டி வரும் என்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x