Last Updated : 07 Mar, 2019 08:35 AM

Published : 07 Mar 2019 08:35 AM
Last Updated : 07 Mar 2019 08:35 AM

எங்களோடு பேசுவதற்கு காங்கிரஸுக்கு என்ன தயக்கம்?- பி.எஸ்.ஞானதேசிகன் பேட்டி

தேர்தல் காலம் வந்துவிட்டால்,  ‘லெட்டர் பேடு’ கட்சிகள்கூட புத்துயிர் பெற்றுவிடும். ஆனால், தேர்தல் ஆரவாரத்துக்குச் சற்றும் முகம் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். என்ன திட்டத்தில்தான் இருக்கிறார்கள் அக்கட்சியினர்? தமாகா மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் பேசலாம்.

எந்தக் கட்சியையும் விமர்சிப்பதும் இல்லை, பாராட்டுவதும் இல்லை. நீங்கள் ஆட்டத்தில் இருக்கிறீர்களா, இல்லையா?

தமாகா சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தஞ்சாவூரில் ஒரு மறியல் போராட்டம்கூட நடத்தியிருக்கிறோம். அவ்வப்போது அறிக்கைகளும் விமர்சனங்களும் வைக்கத்தான் செய்கிறோம். இப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறோம். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தமாகா தொடங்கப்பட்டபோது இருந்த செல்வாக்கு இப்போது அந்தக் கட்சிக்கு இல்லை என்று சொல்கிறார்களே?

இப்போதும் தென் மாவட்டங்களிலும், கொங்குப் பகுதி மாவட்டங்களிலும் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் காங்கிரஸைவிட எங்கள் கட்சியில்தான் அதிகமாக இருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல்விட்டது நாங்கள் செய்த தவறு. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரே ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று தனது வாக்கு சதவிகிதத்தை நிரூபித்தால்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி கட்சிக்காரர்கள் மதிப்பார்கள். இந்த யோசனையை முன்பே நான் சொன்னேன். அது ஏற்கப்படாமல் போய்விட்டது.

திராவிட இயக்கத்துக்கு ஓர் ஆபத்து என்றதும் வைகோ திமுகவின் போர்வாளாகவே மாறிவிட்டார். தமாகாவுக்கு என்ன பிரச்சினை?

தன்னைவிட்டு ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற மனப்போக்கு காங்கிரஸ் தலைமையிடம் சுத்தமாக இல்லை. எவ்வளவோ இறங்கி பிற கட்சிகளோடு கூட்டணி பேசுகிற காங்கிரஸ் கட்சி, ஏன் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச மறுக்கிறது? இங்கே ஏன் தமாகாவுடன் பேச மறுக்கிறார்கள்? ஏன் சரத் பவார், மம்தா பானர்ஜியோடு நல்ல உறவை அவர்களால் வைத்துக்கொள்ள முடியவில்லை? ஏன் வடகிழக்கில் சங்மாவுடன் அவர்களது உறவு மாறுபட்டு நிற்கிறது? ஆக, கோளாறு எங்களிடம் இல்லை. காங்கிரஸ் தலைமையிடம்தான்!

காலங்காலமாக காங்கிரஸில் இருந்த உங்களுக்கு, காந்தி, நேரு என்று பேசிவந்தவர்களுக்கு, அந்த கொள்கைகளோடு எல்லா விதங்களிலும் நேர் எதிராக நிற்கும் பாஜகவோடு கை கோப்பதில் எந்தச் சங்கடமும் இல்லையா?

கஷ்டமான கேள்விதான். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. காந்தியும் நேருவும் எங்களது தேசியத் தலைவர்கள். நாங்கள் எந்தக் கட்சியோடு கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மாறப்போவதில்லை.

மோடியின் பிரச்சார கூட்ட மேடையில் இருந்து வாசன் படம் அகற்றப்பட்டுள்ளதே? என்ன பிரச்சினை?

அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு இறுதியாகாததால் அகற்றப்பட்டிருக்கலாம். இழுபறி என்று சொல்ல முடியாது. நாங்கள் மக்களவைக்கு 2, மாநிலங்களவைக்கு ஒன்று என்று சீட் கேட்டோம். தேமுதிக வருவதைப் பொறுத்துப் பரிசீலிக்கிறோம் என்றார்கள். தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படாததால், எங்களுக்கும் உடன்பாடாகவில்லை. தொடர்ந்து பேசுவோம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x