Published : 26 Feb 2019 09:55 AM
Last Updated : 26 Feb 2019 09:55 AM

வேலைவாய்ப்பு, மதச்சார்பின்மை, ஜனநாயகம்: ராகுலின் நிலை என்ன?

நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்த நெடிய பாரம்பரியம் கொண்டது காங்கிரஸ் கட்சி. அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல் காந்தியின் தலைமையில் மக்களவைத் தேர்தலை முதல் முறையாகச் சந்திக்கப்போகிறது அக்கட்சி. வேலைவாய்ப்பு, மதச்சார்பின்மை, ஜனநாயகம் தொடர்பாக அவருடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருப்பது இயல்பு. ‘அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களும் ரத்து செய்யப்படும்’, ‘ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்’ என்று அவர் அறிவித்திருக்கும் திட்டங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.

நீண்டகால நோக்கில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், அதற்கான பொருளாதார மாற்றங்களும் அவசியம். ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? இவை தொடர்பான தனது திட்டங்களை ராகுல் காந்தி விளக்காவிட்டால் நாட்டின் முன்னேற்றம் குறித்த அவருடைய பேச்சு, ஆளும் பாஜகவின் பேச்சைப் போலவே மிகவும் குறுகியதானதாகவே பார்க்கப்படும்.

சாத்தியமான திட்டமா?

ஏழைகளுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியம் என்று ராகுல் கூறுவது, பாஜகவும் உத்தேசித்துள்ள அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற கருத்துடன் இயைந்ததாகவே இருக்கிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது அர்விந்த் சுப்பிரமணியம் இந்த யோசனையைக் கூறிவந்தார். அத்தகைய திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிடம் நிதி ஆதாரம் இல்லை என்பதால் இதைப் பரிசீலிக்க முடியாது என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா நிராகரித்தார். ஆனால், இது இப்போது சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2,000 வழங்கும் திட்டமாக அமலுக்கு வரத் தொடங்கிவிட்டது.

அனைவருக்கும் மாதாந்திர அடிப்படை ஊதியம் என்ற திட்டத்தை அமல் செய்யும் ஒரே நாடு பின்லாந்து. அந்நாட்டில் நபர்வாரி வருவாய் 41,000 டாலர்கள். இந்தியாவிலோ அது 2,134 டாலர்கள்தான். பின்லாந்து கடைப்பிடித்த இந்தத் திட்டம் அந்நாட்டில் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

நாட்டுக்கு அது பெரிய நிதிச்சுமையாக மாறியது. ஸ்கான்டினேவியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டுக்கு என்று பொது செல்வ வளத்தை உருவாக்கினால்தான் நல்வாழ்வை அளிக்க முடியும் என்கின்றனர். இந்தியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

பாஜக பாதையில் காங்கிரஸ்?

அடுத்தது மதம் தொடர்பான பிரச்சினைகள். பசுவைக் கொன்றதற்காக, மத்திய பிரதேசத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் காங்கிரஸ் அரசு மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. பாஜகவின் எதேச்சாதிகாரத்தைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக்கிப் பேசிவருகிறது காங்கிரஸ். ஆனால், ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸும் அதைப் போலத்தான் நடந்துகொள்ளும் என்பதைப் போல மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின் செயல் அமைந்திருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. பசு வதை கூடாது என்ற அரசின் முடிவால் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்வதில் மட்டும் பெரிய சரிவை ஏற்படுத்திவிடவில்லை, இந்துக்கள் அல்லாதவர்கள் மீது இது தொடர்பாக பல வந்தத்தைப் பயன்படுத்துவதாகவும் மாறி வருகிறது. இறைச்சி ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.28,000 கோடி வருமானம் கிடைத்துவந்தது.

ராகுல் காந்தி கடைப்பிடிக்க நினைக்கும் மென்மையான இந்துத்துவக் கொள்கையால் வெவ்வேறு சமூகங்களுக்கிடையே புதிய நட்புப் பாலங்கள் உருவாகுமா? இதில் பலருக்கும் கருத்து உடன்பாடு இல்லை. மனிதர்களைவிட பசுக்கள் அவ்வளவு முக்கியமானவையா என்று சில காங்கிரஸ்காரர்களே கேட்கின்றனர். கட்சிக்குள்ளேயே எதிரொலிக்கும் இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துகள்தான் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பை உரசிப்பார்க்கப்போகின்றன.

என்னவாகும் ஆதார்?

‘ஆதார்’ எண் பதிவை எல்லாவற்றுக்கும் கட்டாயம் என்று வலியுறுத்திய பாஜகவின் செயலை ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். நாட்டின் குடிமக்கள், குடியுரிமையையே இழக்கவைக்கும் அளவுக்கு ‘ஆதார்’ என்பது எதேச்சாதிகாரமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘ஆதார்’ கட்டாயம் என்பதையே நீக்கிவிடும் சட்டத்தைக் கொண்டுவருமா? அரசின் அதிகாரங்கள் காங்கிரஸ் ஆட்சியால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

வேலைவாய்ப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் இவற்றை எப்படிக் கையாளப்போகிறது என்பதை அறிய வாக்காளர்கள் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறார்கள். ‘தலைமை என்பது கருத்தொற்றுமை உருவாக்குவது – அதற்கான வழியைக் காண்பது’ என்றார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

- அனிதா இந்தர் சிங்,

புது டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.செல்வ புவியரசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x