Published : 23 Feb 2019 01:21 PM
Last Updated : 23 Feb 2019 01:21 PM
அதிமுக - பாமக கூட்டணி இயல்பானது என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் விழுப்புரம் வானூரில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்து அரசியல் தீர்மானத்தை வாசித்துப் பேசியதாவது:
''நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக-பாமக- பாஜக கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அரசியல் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழக திட்டங்களை அதிக எண்ணிக்கையில் போராடி பெறவும், பாமகவுக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்புவது அவசியம் என்பதால் ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு தரப்பட்டது.
தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. பொதுவாக தேர்தல் வெற்றிக்கான அடித்தளம் கூட்டணி என்றால், வெற்றி என்ற இலக்கை நோக்கி கூட்டணிக் கட்சிகளை உயர்த்திச் செல்லும் தூண்களாக இருப்பவை, கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையும், ஒன்றுபட்டு பணியாற்றும் ஏற்ற மனநிலையாகும். அந்தவகையில் அதிமுக-பாமக இடையிலான கூட்டணி இயல்பான கூட்டணி. இதில் பாஜகவும் இணைந்துள்ளது. மேலும பல கட்சிகள் இணையவுள்ளன.
ராமதாஸால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாமக அதற்கான முன் நிபந்தனையாக காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.
நீர்பாசன திட்டங்கள், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 7 தமிழர்கள் விடுதலை, படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கில் 500 மதுக்கடைகளை மூடுதல், மணல் குவாரிகளை படிப்படியாக மூடுதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடித்தல், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தல், மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்தல் ஆகிய பத்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளது''.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT