Published : 27 Mar 2019 07:56 AM
Last Updated : 27 Mar 2019 07:56 AM
அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெற்றிக்கு சிக்கல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின்மறைந்த மூத்த தலைவர் ஹாஜிசுல்தான் கானின் மகன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
உத்தரபிரதேசத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள அமேதி சுமார்30 வருடங்களாகக் காங்கிரஸின் வெற்றிக்களங்களில் ஒன்றாக உள்ளது. அக்கட்சியின் தலைவர்களான காந்தி குடும்பத்தின் வேட்பாளர்கள் இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இடையில் 1998 மக்களவை தேர்தலில்மட்டும் காங்கிரஸின் வேட்பாளரான கேப்டன் சதீஷ் சர்மா, பாஜகவின் சஞ்சய்சிங்கிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.
1999-க்கு பின் சோனியா காந்தி போட்டியிட்டதில் மீண்டும் அமேதியில் காங்கிரஸ் வலுப்பெற்றது.
2004 மக்களவை தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த ராகுல், அமேதியில் போட்டியிட்டார். இவரது தாய் சோனியா அருகிலுள்ள ராய் பரேலிக்கு மாறிக் கொண்டார். ராகுலுக்கு 71 சதவீதமாக கிடைத்த வாக்குகள் அடுத்துவந்த தேர்தல்களில் குறைந்து 2009-ல் 66, 2014-ல் 46 என்றானது. அதேசமயம், ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இராணி 2014-ல் போட்டியிட பாஜகவுக்கு ஓரிலக்கத்தில் இருந்த வாக்கு சதவீதம் 37 என்றானது. இதனால்,அமேதியில் பாஜகவின் கவனம் அதிகரித்து அங்கு மீண்டும் ஸ்மிருதியை வேட்பாளராக்கி உள்ளது.
இந்நிலையில், ராகுலுக்கு புதிய தலைவலியாக முஸ்லிம் வாக்குகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் இங்கு போட்டியிட்ட ராஜீவ் காந்திக்கு 1991-லும், சோனியாவிற்கு 1999-லும் முன்மொழிந்தவர் இந்த ஹாஜி சுல்தான். இதனால், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே அவரது குடும்பத்திற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதற்கான மரியாதையாக நல்லபதவி அளித்து தம்மை பயன்படுத்தவில்லை என சுல்தானின் மகனானஹாஜி ஹாரூண் ரஷீத் அதிருப்தியில் இருந்தார். இதனால், அவர்அமேதியில் ராகுலை எதிர்த்துசுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஹாஜி ஹாரூண் ரஷீத் கூறும்போது, ‘எனது தந்தை காங்கிரஸுக்கு செய்த சேவைக்கு மதிப்பு தரப்படவில்லை. உபி மாநில தலைமையும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது அமேதி முஸ்லிம்கள் இடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் எனக்கு அமேதியில் உள்ள சுமார் ஆறு லட்சம் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.
இத்தனைக்கும் 2014-ல் ஆம் ஆத்மி சார்பில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட குமார் விஸ்வாஸ் இந்தமுறை போட்டியிடவில்லை. உ.பி.யில் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜும் அமேதியில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இதனிடையே, கடந்த 2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டப் பேரவை தேர்தலில் அமேதியின் ஐந்து தொகுதிகளில் பாஜகவுக்குக் 4 கிடைத்தன. மீதியுள்ள ஒரு தொகுதியும் சமாஜ்வாதிக்கு சென்றதே தவிர அதை காங்கிரஸால் தக்க வைக்க முடியவில்லை. இதனால் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சிக்கல் மேல் சிக்கல் உருவாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT