Published : 18 Mar 2019 08:13 AM
Last Updated : 18 Mar 2019 08:13 AM
நாங்கள் மக்கள்நலக் கூட்டணியில் வைகோவால் அடைந்த பாதிப்பை இனி திமுகவும் பெறும் என்று தேமுதிக துணைப் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் தொடர்பாக அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் தோன்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக வரை வளர்ந்த தேமுதிகவால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதி கூட பெற முடியவில்லையே?
இதற்கு அதிமுக, திமுகவிற்கு மாற்றாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கேப்டன் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் சிலகட்சிகளின் தவறான நடவடிக்கைகளே காரணமாகும். குறிப்பாகவைகோவின் தவறான அறிக்கைகள், அவர் கோவில்பட்டியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது போன்ற நடவடிக்கைகளே காரணம். இதே நடவடிக்கைகளை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியிலும் வைகோ செயல்படுத்தி அக்கூட்டணியை தோல்வியுறச் செய்த பிறகே வெளியே வருவார். நாங்கள் மக்கள்நலக் கூட்டணியில் அடைந்த பாதிப்பை இனிதிமுகவும் வைகோவால் பெறும்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து…
இது மக்களவை தேர்தலுக்கு பிறகு தெரிந்து விடும். ஏனெனில் வளர்ந்த அரசியல் கட்சிகளை நாம் சாதாரணமாகக் கருத முடியாது. எனவே இந்த தேர்தலில் ஜெயலலிதாவால் அதிமுகவில் வெற்றிடமா அல்லது கலைஞரால் திமுகவில் வெற்றிடமா என்பதை மக்கள் அளிக்கும் வாக்குகள் வெளிப்படுத்தும்.
2011-ல் உங்களுடன் கூட்டணி வைத்ததற்காக சட்டப்பேவையில் வருந்திய ஜெயலலிதாவின் கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்தது சரியா?
அவரது கருத்து சட்டப்பேரவை தேர்தலுக்கானது. இது மக்களவை தேர்தல் என்பதால் இதில் பொருத்திப் பார்க்கக் கூடாது. கடந்தகால அரசியலை பார்த்தால், திமுகவை எதிர்த்து எவ்வளவோ பேசிய வைகோ அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே இந்த தேர்தலில் அனைவரும் இணைந்தால் தான் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். எங்கள் தொண்டர்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதுடன் எங்கள் கட்சிக்கும் பொருந்துகிறது என்பதால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தோம் .
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறியது ஏன்?
2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டி இருந்ததால் பாஜகவை விட்டு விலகினோம். என்றாலும் அவர்கள் எங்களுக்கு அளித்த மதிப்பு தொடர்ந்தது. தற்போது மீண்டும் மக்களவை தேர்தலில் அவர்களுடன் இணைந்துள்ளோம்.
2014-ல் பாஜக கூட்டணியில் உங்களுக்கு 14, பாமகவுக்கு 8 தொகுதிகள் என்றிருந்தது. இப்போது உங்களுக்கு 4 ஆக சுருங்கியுள்ளதே…
2014 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேமுதிக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்தோம். இதனால் நாங்கள் அதிக தொகுதிகளில் நின்றோம். 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சேர்வதாக நாங்கள் தான் முதல் கட்சியாக கூட்டணி அறிவிப்பு வெளியிட்டோம். இதன்பிறகு கூட்டணி குறித்து இதற்கிடையில் எங்களுக்கு முன்பாக பாமக நேரடியாக அதிமுகவுடன் கூட்டணி பேசியதால் அதிக தொகுதிகள் பெற்றது.
2014-ல் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் 6 கட்சிகள் இடையே ஒரே நாளில் ஒப்பந்தம் ஏற்பட்டது போல் தற்போது நடந்திருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமாக தொகுதிகள் கிடைத்திருக்கும். தற்போதைய கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்றதே இதற்கு காரணம். பாஜக தலைமை ஏற்றிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. எனினும், வெற்றிக்கு பிறகு பாஜக தலைமையில் அமையும் ஆட்சியில் எங்கள் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.
வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட தேமுதிகவிலும் அது தொடர்கிறதே? நீங்கள் துணை பொதுச்செயலாளர், உங்கள் சகோதரி பொருளாளர் அடுத்து மூத்த மகன் விஜய் பிரபாகரன் என இருப்பது குறித்து…
2006-ல் கட்சி தொடங்கியது முதல் நான் பணியாற்றி வருகிறேன். 2011 தேர்தலில் நான் போட்டியிடாதது பற்றி எவரும் பேசுவதில்லை. குடும்பத்தினராக இருந்தாலும் கட்சியில் அவர்களின் உழைப்பை பொறுத்தே பதவிக்கு வர முடியும். எந்த முன் அனுபவமும் இல்லாமல் நேரடியாக தேர்தல் களத்தில் இறக்குவது தான் வாரிசு அரசியல்.தொடக்கம் முதல் மக்கள் பிரச்சினைக்காக கட்சியில் இருந்த எங்களை அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது.
திரையுலகில் இருந்து வந்த விஜயகாந்தால் பெரிய அளவில் சாதிக்க முடியாததால் கமல், ரஜினி அரசியலுக்கு வருவதாக எடுத்துக்கொள்ள முடியுமா?
எங்களை பொறுத்தவரை திரை நட்சத்திரங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் கேப்டனும் அரசியலில் சாதித்துள்ளார். இதற்கு அவரது தலைமையிலான தேமுதிகவுடன் தமிழக கட்சிகள் கூட்டணிக்கு முயன்றதே சான்றாகும். தற்போது தமிழக அரசியலே எங்கள் கேப்டனை சுற்றியே அமைந்துள்ளது. அரசியலில் இருந்தபடி திரையில் இருந்தமையால் நான் இதில் கலைஞரை சேர்க்கவில்லை. எனவே கேப்டனின் வெற்றியை பார்த்தே கமலும், ரஜினியும் அரசியலில் நுழைய விரும்புகிறார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது.
எதிரும், புதிருமான கட்சிகளுடன் ஒரே சமயத்தில் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது சரியா? இதன் மீதான விமர்சனத்திற்கு உங்கள் பதில்?
தேர்தலில் சமயத்தில் பலருடனும் கூட்டணி பேசுவது நாடு முழுவதிலும் வழக்கமானதுதான். இதில், அதிக எண்ணிக்கையிலும், விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் தொகுதிகளை பெறுவதே நோக்கமாக இருக்கும். இதையே தான் நாங்களும் செய்திருந்தோம்.
மக்களவைத் தேர்தலுக்காக நீங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?
சீனா, கொரியா போன்ற நாடுகளில் குடிசைத் தொழில்களை பெருந்தொழில்களாக மாற்றியது போல், இந்தியாவிலும் மாற்ற வேண்டும். அப்போது தான் அனைவரும் லாபம் பெற்று வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். இதற்காக, நாட்டின் முக்கிய நகரங்களில் பெருந்தொழில் மையங்கள் அமைத்து அங்கு கிராமத்திலும் குடிசைத் தொழில் செய்பவர்களை அனுப்பி அனைத்துவகை உதவிகளையும் செய்து தர அரசு முன்வரவேண்டும் என தேமுதிக வலியுறுத்தும். கேப்டனின் இந்த கனவுத்திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT