Last Updated : 06 Mar, 2019 08:52 AM

 

Published : 06 Mar 2019 08:52 AM
Last Updated : 06 Mar 2019 08:52 AM

டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

மக்களவைத் தேர்தலுக்காக தொடர்ந்து கூட்டணிக்கு முயற்சிக்கும் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் மீண்டும் புறக்கணித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பறித்த ஆம் ஆத்மி, தொடர்ந்து ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் வலுவான எதிர்க்கட்சியாக உருவானது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற முயலும் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இடம்பெற்றுள்ளன.

எனவே, காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது டெல்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாபில் தமக்கு பலன் தரும் என கேஜ்ரிவால் கருதுகிறார். இந்த கூட்டணி அமைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் வலியுறுத்தி வருகிறார்.

இவர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசியும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸின் டெல்லி தலைவர்கள் விரும்பவில்லை.

இந்த கூட்டணி அமைந்தால் மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையாது என அவர்கள்கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தாம் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்த கேஜ்ரிவால், அதன் 6 வேட்பாளார்களையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கை பாஜகவுக்கு மக்களவை தேர்தலில் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், காங்கிரஸ் கட்சியின் டெல்லி நிர்வாகிகளை அதன் தலைவர் ராகுல் காந்தி நேற்றுஅழைத்து பேசினார். இதில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், முன்னாள் தலைவர் அஜய்மாக்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எனினும், ராகுலின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஷீலா தீட்சித் கூறுகையில், ‘எங்கள் வாதத்தை ராகுல் ஏற்றுகொண்டார். இதனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமையும் வாய்ப்புகள் இல்லை. டெல்லியின் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.’ என்றார். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை ஆம் ஆத்மி மீண்டும் இழந்துள்ளது. இக்காரணத்தால் டெல்லியில் பிரியும் வாக்குகளின் பலன் பாஜகவுக்கு மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x