Last Updated : 16 Mar, 2019 11:42 AM

 

Published : 16 Mar 2019 11:42 AM
Last Updated : 16 Mar 2019 11:42 AM

உ.பி.யில் காங்கிரஸுடன் கூட்டு சேர ஷிவ்பால் மறுப்பு

உ.பி.யில் காங்கிரஸுடன் கூட்டு சேர ஷிவ்பால் சிங் யாதவ் மறுத்துள்ளார். சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் சகோதரரான இவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

பிரகதீஷல் சமாஜ்வாதி கட்சி லோகியா (பிஎஸ்பிஎல்) கட்சியின் தலைவரான ஷிவ்பாலுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இது முடிவு பெறாமல் காங்கிரஸ் உ.பி.யின் சில தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் ஷிவ்பால் அதிருப்தி அடைந்துள்ளார்.

இது குறித்து ஷிவ்பால் கூறும்போது, ''காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே பொய்யர்கள். கடந்த ஒரு மாதமாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி முடிவிற்கு காத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் தன் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளது. இவர்களுடன் நான் கூட்டணி வைக்க மாட்டேன்'' எனத் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை எதிர்க்க நடைபெற்று வந்தது. இனி, ஒத்து கருத்துள்ள சிறிய கட்சிகளுடன் தாம் பேச இருப்பதாக ஷிவ்பால் அறிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அதன் மூத்த தலைவர் சோனியா காந்தியை சமீபத்தில் ஷிவ்பால் சந்தித்தார். இதனால், தம் கட்சிக்கு சுமார் 12 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கும் என நம்பியிருந்தார்.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்காமலே காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது ஷிவ்பாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் இதுவரையும் உ.பி.யில் சிறிய கட்சிகளான மஹான் தளம் மற்றும் அமைதிக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி பேசி முடித்துள்ளது.

உ.பி.யின் பெரோஸாபாத்தில் தான் போட்டியிடப் போவதாக ஷிவ்பால் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் ஷிவ்பால் உறவினரும் முலாயம் குடும்பத்தைச் சேர்ந்த அக்‌ஷய் சிங் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x