Last Updated : 24 Feb, 2019 09:32 AM

 

Published : 24 Feb 2019 09:32 AM
Last Updated : 24 Feb 2019 09:32 AM

கர்நாடகாவில் பிரச்சாரம் பிரியங்கா வருவாரா? - ஆவலாக காத்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியங்கா காந்தி கடந்த தேர்தல்களில் தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிட்ட ரே பரேலி, அமேதி தொகுதிகளில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது இளம் வயதிலேயே பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்காகவும் பிரியங்கா பிரச்சாரம் செய்துள்ளார். தற்போது உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ராகுலுடன் உத்தர பிரதேசத்துக்கு சென்று, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், பிரச்சாரம் செய்ய கர்நாடகாவுக்கும் வருமாறு பிரியங்கா காந்திக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 9-ம் தேதி கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் நிலையில், இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதால் பிரியங்கா கர்நாடகாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது: உத்தரபிரதேசத்துக்கு அடுத்து கர்நாடகாதான் நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானது. அதனால் தான் இந்திரா காந்தி 1977-ம் ஆண்டு ரே பரேலியில் தோல்வி அடைந்த பிறகு, அடுத்த ஆண்டே கர்நாடகாவில் உள்ள சிக்கமகளூரு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தியோடு சிறுமியாக இருந்த பிரியங்காவும் சிக்கமகளூரு வந்திருந்தார்.

பின்னர் 1999-ம் ஆண்டு சோனியா காந்தி முதன்முதலில் தேர்தலில் நின்றது கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில்தான். அப்போது அவருக்கு பிரச்சாரம் செய்வதற்காக பிரியங்கா காந்தி வந்திருந்தார். இந்திரா காந்தி சாயலில் இருந்த அவரது பிரச்சாரம் பெண்களையும், முதியவர்களையும் வெகுவாக ஈர்த்தது. இதனால் சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலே சோனியாவின் அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது.

இப்போது மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தியோடு, பிரியங்கா காந்தியும் கர்நாடகாவுக்கு அடிக்கடி வந்து, பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இதுகுறித்துடெல்லியில் பிரியங்காவை நேரில்சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். ராகுல் காந்தியோடு பிரியங்காவும் பிரச்சாரம் செய்தால், கர்நாடகாவில் பாஜக ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாது. எங்களது கோரிக்கையையும், அதன் நியாயத்தையும் பிரியங்கா உணர்வார்''என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x