Published : 15 Apr 2014 10:28 AM
Last Updated : 15 Apr 2014 10:28 AM
புதிய வாக்காளர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளு மன்றத் தேர்தலில் பெரிய வெற்றி யைப் பெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
கிருஷ்ணகிரி தொகுதி பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து, ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் வைகோ பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
புதிய வாக்காளர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைக்கும். இதன் மூலம் திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும். கிருஷ்ணகிரியில் வரும் புதன் கிழமை (ஏப். 16) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்தத் தேர்தலில் மோடி அலை யால் பாஜக 272 தொகுதிகளில் தனித்தே வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 320 தொகுதிகளில் வெற்றி பெற்று, மோடி பிரதமராவது உறுதி.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி எம்.பி-க்களின் துணை இல்லாமலேயே மோடி பிரதமராவார். எனினும், நமது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
காவிரி பிரச்சினையில் கர் நாடகமும், பாலாறு விவகாரத்தில் ஆந்திராவும், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளமும் நம்மை வஞ்சிக்கின்றன. தமிழக மீனவர்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு மோடியின் ஆட்சியில் தீர்வு கிடைக்கும். அதற்கு நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வென்று, நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்துக்கு விளைவித்த கேடுகளுக்கு, மோடி ஆட்சியில் நியாயம் கிடைக்கும்.
அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாதான் பிரதமர் என்கிறார்கள். எந்த நாட்டுக்கு அவர் பிரதமராகப் போகிறார்? மத்திய ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்கும் என்கிறார் ஜெயலலிதா. பாஜக தனித்தே வெற்றி பெறும். எனவே, ஜெயலலிதாவின் எந்தக் கனவும் பலிக்காது. கருணாநிதியோ மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, தோல்வி பயத்தால் திமுக, அதிமுக-வினர் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT