Published : 24 Apr 2014 13:03 pm

Updated : 24 Apr 2014 19:19 pm

 

Published : 24 Apr 2014 01:03 PM
Last Updated : 24 Apr 2014 07:19 PM

தமிழகத்தில் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும்: வைகோ உறுதி

தமிழகத்தில் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் என கலிங்கப்பட்டியில் வாக்களித்த பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தனது கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 9.40 மணிக்கு தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்ற தலைவர் வைகோ வாக்களித்தார்.


வாக்களித்துவிட்டு வெளியே வந்த தலைவர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"உலகத்தின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்பட்டியில் வாக்காளனாக இருக்கிறேன்.

இந்த முறை அதிக மகிழ்ச்சியோடு ஓட்டுப்போடுவதற்குக் காரணம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னமாகிய பம்பரம் சின்னத்திலேயே ஓட்டுப்போடுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

கூட்டணி அமைந்த காலங்களில் இந்தத் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் ஒட்டுப்போட்ட வாய்ப்பை மனதுக்கு மகிழ்ச்சியான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.

தமிழகத்தில் இந்தத் தேர்தல் பதட்டம் இல்லாமல், எங்கும் எந்தக் கலவரமும் இல்லாமல் அசம்பாவத சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு பொதுமக்களுக்கும் அனைத்துக் கட்சித் தொண்டர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பணத்தின் ஆதிக்கம் செல்லுபடியாகாது என்பதில் மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். நிச்சயமாக செல்லுபடியாகாது. இதற்கு என் போன்றவர்களின் பிரச்சாரம்தான் காரணம்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய புதிய வாக்காளர்கள், வாக்குரிமை இல்லாத படிக்கின்ற என் தம்பிகள், தங்கைகள் எனது பேரப் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையரிடம், உலக நடப்புகள் முதற்கொண்டு ஜெனீவா முதல் முல்லைப் பெரியாறு பிரச்சினை வரை அனைத்து பிரச்சினைகளையும், ஊழலினுடைய கொடுமையையும் எடுத்துக்கூறி, ஓட்டுக்குப் பணம் வாங்குவது கேடு என்பதை வீட்டுக்கு வீடு அவர்கள் விளக்கிக் கூறி ஜனநாயகத்துக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

ஓட்டுக்குக் கொடுக்கும் 500 ரூபாய் என்பது 5 வருடத்துக்கு கணக்குப் பார்த்தால் 27 பைசாதான். இது பொதுமக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை வைத்து ஒரு பொடி மட்டைகூட வாங்க முடியாது. பிச்சைக்காரர்களுக்குகூட ஒரு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். இது மிகவும் கேவலமான செயல்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தொகுதியில் வெற்றி பெறும். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு.

நான் தொடக்கத்திலிருந்து சொல்லிக்கொண்டு வருவதுபோல், திமுக, அதிமுக என்ற ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது இந்தத் தேர்தலில்தான். ஜனவரி 1 ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் கூட்டத்திலேயே தெரிவித்தேன், நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. மட்டும் 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் விடிவு ஏற்படுவதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக இருக்கும். அதில் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கும் பங்கு இருக்கிறது.

இந்த தென்காசி தொகுதியைப் பொறுத்தமட்டில், சென்னையில் இருந்து சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வரை செல்கிற இந்த அகல இரயில் பாதை திட்டத்தை, வாஜ்பாயிடம் எடுத்துக்கூறி நான்தான் அனுமதி வாங்கிக் கொடுத்தேன். செங்கோட்டை -புனலூர் இரயில் தடம் இன்னும் மீதம் இருக்கிறது. இங்கு சதன் திருமலைக்குமார் வெற்றி பெற்றவுடன் மோடியிடம் எடுத்துக்கூறி, நிதி ஒதுக்கீடு பெற்று, எவ்வளவு விரைவாக விரைந்து நிறைவேற்ற முடியுமோ? அவ்வளவு விரைவாக நிறைவேற்றித் தருவோம்.

சென்னை - செங்கோட்டை அகல இரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்துவதற்குக் கேட்கும்போதே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலையும், சங்கரன்கோவில் ஆடி தபசையும், இங்குள்ள பருத்தி வியாபாரத்தையும், விவசாயிகள் நிலைமையையும், குற்றாலம் சுற்றுலா தலமாக வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறித்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தர கேட்டுக்கொண்டேன்.

தமிழக அரசியலில் 1972க்குப் பின்பு, திமுக அல்லது அதிமுகவுக்கு என்று மாறி மாறி ஓட்டுப்போடும் நிலை இந்தத் தேர்தலில் மாறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையில் கூட்டணியில் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ஐயா டாக்டர் ராமதாÞ அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளிளுடன் பலமான அணி அமைந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிந்த பின்பு தமிழகத்தில் மிக வேகமான முறையில் அரசியல் மாற்றம் வரும் சூழ்நிலை தானாக அமையும்" இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


மக்களவை தேர்தல்வைகோ

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author