Published : 13 Apr 2014 02:15 PM
Last Updated : 13 Apr 2014 02:15 PM
வாக்குக்கு பணம் கொடுப்போர் மீதும், பெறுவோர் மீதும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.வி.சம்பத் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சனிக் கிழமை கூறியதாவது:
பாரபட்சமின்றி செயல்படுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இணைய வீடியோ கண்காணிப்பு கேமராக் கள் மூலம் குறிப்பிட்ட வாக்குச்சாவடி கள் கண்காணிக்கப்படும். தேர்தல் செலவு குறித்து கண்காணிப்பதில் மிகவும் குறிப் பிடத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது.
எனவே, தேர்தல் செலவு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். வாகன சோதனையின் போது பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. லஞ்சம் இல்லாத வாக்களிப்பை உறுதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேர்தல் செலவு கண்காணிப்பு பார்வை யாளர்கள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் நிழல் செலவுக் கணக்கு தயாரிப்பார்கள். இரண்டும் ஒப்பிடப்படும். விதிமீறல்கள் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
24 மணி நேர போன் சேவை
வாக்காளர்களுக்கு பணம், மது கொடுப்பதை முழுவதுமாக தடுக்க, கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படும். புகார்களைப் பெற ‘1950’ என்ற எண் கொண்ட இலவச தொலைபேசி 24 மணி நேரமும் செயல்படும். மது விற்பனை கண்காணிக்கப்படும்.
லஞ்சம் கொடுப்பதை தடுக்க கிராமங்களில் விழிப்புணர்வு கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டியினர் உரிய தகவல்களை அதிகாரி களுக்கு வழங்குவர்.
தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டு மென்று வாக்காளர்களுக்கு யாரும் மிரட்டல் விடுக்க முடியாது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அவர்கள் மீது வழக்கு பதியப்படும். வாக்குக்கு பணம் கொடுப்போர் மீதும், பெறுவோர் மீதும், இந்தியத் தண்டனைச் சட்டம் 171 பி பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.
பாரபட்சம் கிடையாது
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது போல, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இல்லை. தேர்தல் விதிகளில் இருப்பதைத்தான் செயல்படுத்துகிறோம்.
கட்சி வேட்பாளருக்காக எங்கு வாக்கு கேட்டாலும், வேட்பாளர் அங்கு இல்லா விட்டாலும்கூட அந்த செலவு, அவர் கணக்கில் தான் சேர்க்கப்படும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை ஏற்கெனவே பிறப்பித்துள்ளது.
இவ்வாறு சம்பத் கூறினார். தமிழக தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT