Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் நேற்று மாலை வரை வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம், திமுக சார்பில் உமாராணி, தேமுதிக சார்பில் சுதீஸ், காங்கிரஸ் சார்பில் மோகன் குமாரமங்கலம் மற்றும் பகுஜன் சமாஜ், தமிழ்நாடு திரிணாமுல் காங்கிரஸ் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 பேர் களத்தில் உள்ளனர்.
சேலம் தொகுதியை பொருத்த வரை அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நான்கு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட ஓட்டு வங்கி உள்ள நிலையில், பொதுமக்களின் பெருவாரியான வாக்குகளை பெறும் கட்சி வெற்றி வாகை சூடும் நிலை உருவாகியுள்ளது.
ஆளும்கட்சி வேட்பாளரான பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு என்று தனிப்பட்ட முறையிலான செல்வாக்கு தொகுதியில் இல்லை என்றாலும், கட்சியின் ஒட்டு மொத்த பலத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் உமாராணி பலத்த போட்டிக்கு நடுவில் வேட்பாளராக சீட்டு வாங்கியுள்ளார். கட்சி தொண்டர்களின் உழைப்பை நம்பி களத்தில் உள்ளார். மற்ற சமூக ஓட்டுகள் கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளார். சிறுபான்மையினர் திமுக வேட்பாளருக்கு பலமாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது, திமுக வேட்பாளருக்கு சறுக்கலான விஷயம். இருந்தாலும் திமுக வேட்பாளர் சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வாக்கு வேட்டையாடி வருகிறார்.
தேமுதிக வேட்பாளர் சுதீஸ் மோடி அலையை நம்பி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் சுதீஸ் தொகுதிக்குள் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
புதிய வாக்காளர்கள் தேமுதிக விற்கு கூடுதல் டானிக் என்றாலும், பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அதிமுக-திமுக ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் மத்தியில் தேமுதிக-வின் மாற்றத்திற்கான வித்து முளைக்குமா என்ற கேள்விக்கு வாக்காளர்கள் விடை அளிக்கவுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமாரமங்கலம் கட்சியை மட்டுமே நம்பி களத்தில் இறங்கவில்லை என்பது தெரிகிறது. அவரது குடும்ப பாரம்பரியத்தை தலை நிமிர வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களத்தில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில்
உள்ள முக்கிய பிரமுகர்களே தேர்தலில் போட்டியிட அஞ்சிய நிலையில், இளைய தலைமுறையை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளராக மோகன்குமாரமங்கலம் துணிச்சலாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ் அபிமானிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு நான்கு முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும், அவரவர் பாணியில் தீவிரமாக வாக்குசேகரித்துள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT