Published : 12 Apr 2014 09:32 AM
Last Updated : 12 Apr 2014 09:32 AM
இஸ்லாமியர்களுடனான உடன்பாட்டை பிரிக்க ஜெயலலிதாவால் முடியாது என்றார் திமுக தலைவர் கருணாநிதி.திமுக கூட்டணியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து வெள்ளிக்கிழமை மாலை மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
“இப்போது மனிதநேய மக்கள் கட்சியும் திமுகவும் கொண்டிருக்கிற உடன்பாடு சாதாரண உடன்பாடு அல்ல. சமுதாய நலனில் அக்கறை கொண்டதால் ஏற்பட்ட உடன்பாடு. அதனால் தான் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் இன்று மயிலாடுதுறைக்கு போக முடியுமா என்று துணைவியாரும் நண்பர்களும் கேட்டபொழுது கூட ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றாவிட்டால் அவனுக்கு பெயர் கருணாநிதி அல்ல என்று இங்கே வந்திருக்கிறேன்.
என்னுடைய கெழுதகை நண்பர் ஹைதர் அலிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற சின்னம் தன்னையே உருக்கிக்கொண்டு உலகத்திற்கு ஒளி தருகிற மெழுகுவர்த்தி சின்னம். உதயசூரியன் இல்லாத இடத்தில் ஒளிதருவது இந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னம். ஹைதர் அலிக்கு வாக்கு கேட்டு உங்களை சந்திக்கிற மகிழ்ச்சி இன்னமும் உறுதிசெய்யப்பட ஹைதர் அலியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து உருவாக்கியிருக்கிற கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தையோ இந்தியாவையோ ஆளுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அல்ல. மத வேறுபாடு இல்லாமல் உறுதியான கொள்கைக்காகவும் கோட்பாடுகளுக்காவும் உருவான கூட்டணி. இது நாட்டின், இனத்தின் நல்வாழ்வுக்குப் பாடுபடும் கூட்டணி.
இந்த கூட்டணி சார்பாக ஜெயலலிதாவைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பெங்களூரு வழக்கில் இருந்துகூட தப்பலாம். ஆனால், எங்களின் இந்த உறுதியை, இஸ்லாமியர்களோடு ஏற்பட்டிருக்கிற உடன்பாட்டை உங்களால் பிரித்துவிட முடியாது” என்றார் கருணாநிதி.
இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திருவிடைமருதூர் ராமலிங்கம், குத்தாலம் கல்யாணம், அன்பழகன், ஜெகவீரபாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT