Published : 16 Apr 2014 07:34 PM
Last Updated : 16 Apr 2014 07:34 PM
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்வைத்தார்.
தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சேலத்தில் தேமுதிகவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவரிடம் விஜயகாந்த் ஒரு மனுவை அளித்தார். அதன் விவரம்:
'இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லத் தேவையான நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி. விரைவில் பிரதமராகப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையால் விவசாயம் நலிந்து விட்டது. மின்சாரப் பற்றாக்குறையால் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் முடங்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்ததால் அவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
மேலும், பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறைந்து வாழ்கிறார்கள். அதிமுக, திமுக ஆட்சிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.
விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் ஏழைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து, அவர்களை மேலும் பரம ஏழைகளாக மாற்றிவிட்டது.
விரைவில் தங்கள் தலைமையில் அமைய உள்ள மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
* குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.
* நதிகளை இணைத்து தேசிய மயமாக்கி, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் செய்ய வேண்டும்.
* தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
* கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
* தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
இவை மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமையும் அரசு செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று அந்த மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT