Published : 23 Apr 2014 08:30 AM
Last Updated : 23 Apr 2014 08:30 AM

தேர்தலில் திமுகவினருக்கு நம்பிக்கை போய்விட்டது: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடக்குமா, தேர்தல் கமிஷன் நேர்மையாக தேர்தலை நடத்துமா என்ற நம்பிக்கை போய்விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் தெரு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தலில், எடுத்த எடுப்பிலேயே கட்சிகளை, கட்சித் தலைவர்களை பயமுறுத்தி, பாசாங்கு செய்தாலும், பூச்சாண்டி காட்டுவது போலத்தான் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் உள்ளன. தேர்தல் கமிஷனில் பொறுப்பேற்ற அதிகாரிகள் நல்லவர்கள், வல்லவர்களாக இருக்கலாம். ஆனால், கடந்த 2 தேர்தல்களைப் பார்க்கும்போது, தேர்தல் அதிகாரிகள் நல்லவர்கள் போல் நடிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

திமுகவினரின் தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையம் அதிகார வர்க்கத்துக்கு, அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடப்போருக்கு உரியதாகத்தான் இருக்கிறது. அதனால், சாதாரண மக்கள் அடங்கித்தான் போக வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்று எனக்கும் தேர்தல் கமிஷனுக்கும் தெரியும்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் இருக்க வேண்டும் என்ற சபல புத்திக்கு அடிகோல்பவர்களாகவே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறேன். எதிர்க்கட்சிகளின் வாக்குகளை திசை திருப்பி, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை மறைத்துவிட்டு, எதிர்க்கட்சித் தொண்டர்களை எல்லாம் விரட்டிவிட்டு, இறுதியாக நாங்கள் ஜெயித்து விட்டோம் என்று தங்களுக்குத் தானே சபாஷ் போடும் அதிகார வர்க்கம் உள்ளது. அதற்கு துணை போகும் நிலையில் ஒரு சில அதிகாரிகள் இருக்கின்றனர்.

காமராஜர், ராஜாஜி காலத்தில் ஆட்சிகள் மாறின. காமராஜரே தோற்றார். அண்ணாவே தோற்றார். ஆனால் இப்போது பணத்தையும் பொருட்களையும் கொடுத்து, கடைகளில் பொம்மைகளை வாங்குவதுபோல் வாக்கு களை வாங்கும் நிலை உள்ளது. இதைப் போக்கும் வகையில் தேர்தல் கமிஷன் நடந்து கொள்ளவில்லை.

திமுகவினராகட்டும் பொறுப்பாளர்களா கட்டும் அல்லது வேட்பாளர்களாகட்டும், ஒரு நம்பிக்கை போய்விட்டது. உடனே பத்திரிகைகள் இதையே தலைப்பாக்கி, தேர்தலில் நம்பிக்கையின்றி அவர்களே கைவிட்டு விட்டார்கள் என்று எழுதி விடுவார்கள். தேர்தல் கமிஷன் எந்த அளவுக்கு நேர்மையாக நடப்பார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது என்றுதான் சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை 12 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன். காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் தேர்தலில் எப்படி நடக்க வேண்டுமென்று கற்றுக் கொடுத்துள்ளனர். எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் செல்லத்தக்க வாக்குகளைப் பெற நேர்மையுடன் நடந்து கொள்ள அண்ணா கற்றுக் கொடுத்துள்ளார்.

எப்படியும் வெற்றி பெறலாம் என்ற தந்திரத்தை எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் பல தவறுகள் நடக்கின்றன.

நாங்களோ ஏழைக்கட்சி. செல்வச் சீமான்கள் அல்ல. நாங்கள் கட்சித் தோழர்களிடம் திரட்டிய பணத்தை தேர்தலுக்கு கூட்டம் நடத்த, பந்தல் போட என செலவு செய்கிறோம்.

ஆனால், அதிமுக பல மாதங்களுக்கு முன்பே பல கோடி திரட்டி, அதைப் பங்கிட ஒவ்வொரு மந்திரியை நியமித்து, இத்தனை பேரைத் திரட்ட வேண்டும். இல்லாவிட்டால் மந்திரி பதவி போய்விடும் என்று மிரட்டி, தேர்தல் பணிகள் நடத்துகின்றனர்.

எனவே, இப்போது ஜனநாயகத்துக்கு மதிப்பில்லை. ஆனால் நாங்கள் மனஉறுதியை, மக்கள் பலத்தை நம்பி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

முன்னதாக சென்னையின் 3 தொகுதி களிலும் கருணாநிதி வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் காலை 11.30 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய கருணாநிதி, திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, தாமஸ் ரோடு, தியாகராய நகர், அசோக் நகர், புதூர், மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே பொதுமக்களிடம் கையசைத்தும், சிறிது நேரம் பேசியும் வாக்கு சேகரித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x