Last Updated : 21 Apr, 2014 09:35 AM

Published : 21 Apr 2014 09:35 AM
Last Updated : 21 Apr 2014 09:35 AM

இந்தியாவுக்குத் தேவை மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்!: அரிந்தம் சௌத்ரி பேட்டி

அரிந்தம் சௌத்ரி இன்றைய தலைமுறையின் முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவர். பன்முக ஆளுமை. அடிப்படையில் பொருளாதார நிபுணரான அரிந்தம், திட்டமிடல் - மேலாண்மைக்கான இந்திய நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.) எனும் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் தலைவர். எதையும் பிரம்மாண்டமாக யோசிக்கச் சொல்லும் அரிந்தம், தன்னுடைய 'சண்டே இந்தியன்' பத்திரிகையை 14 மொழிகளில் தொடங்கியவர். திரைப்படத் தயாரிப்பாளராக மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். மத்திய திட்டக் குழுவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த 2001-ல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய தினம், தொலைக்காட்சியில் மாற்று பட்ஜெட் ஒன்றைத் தாக்கல்செய்வது இவருடைய வழக்கம். அரிந்தத்தின் ‘கவுண்ட் யுவர் சிக்கன் பிஃபோர் தே ஹேட்ச்' மற்றும் ‘டிஸ்கவர் த டைமண்ட் இன் யூ' இரு புத்தகங்களும் தலா பத்து லட்சம் பிரதிகள் விற்றவை. ஃபேஸ்புக்கில் 44.32 லட்சம் பேர் அரிந்தத்தைப் பின்தொடர்கிறார்கள். அரிந்தம் வசிப்பது டெல்லியில் என்றாலும், அவர் மனம் வாழ்வது கொல்கத்தாவில். ஒரு வங்காளியான அரிந்தம், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கால் நூற்றாண்டு ஆட்சியைத் தகர்ப்பதில் முன்வரிசையில் நின்றவர்.

இடது சிந்தனை பேசும் வலதுசாரி என்று உங்களை அழைக்கலாமா?

நல்ல கேள்வி! நான் சுதந்திரமான சந்தை, தடையற்ற தொழில் முதலீடு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவன். இதை நான் ‘மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்' என்று அழைப்பேன். இதையே ‘ஜனநாயக முதலாளித்துவம்' என்றால் மற்றவர்களை ஏற்க வைப்பது எளிதான செயல் அல்ல. ஆனால், இதுதான் எனது நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீதி பெறும் உரிமை ஆகிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிகண்டுவிட்டால் பிறருடைய ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் தடை விதிப்பதற்கு அவசியமே ஏற்படாது.

வளர்ச்சி என்பதற்கு உங்களுடைய இலக்கணம் என்ன?

முந்தைய கேள்விக்குச் சொன்ன அதே பதில்.

ஒரு காலத்தில் மோடியை விமர்சித்தீர்கள்; இப்போது பிரதமர் பதவிக்கு அவரை முன்மொழியும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர். எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

குஜராத் வகுப்புக் கலவரத்தின்போது என்னுள் சில கேள்விகள் எழுந்தன. அதற்குப் பிறகு பலமுறை நான் குஜராத் சென்றேன். கலவரம் எப்படி நடந்திருக்கும் என்று பல்வேறு சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தேன். சுதந்திர இந்தியாவில் பல இடங்களில், பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கும் மிகமிக துரதிர்ஷ்டமான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. புதிதாக வந்த முதல்வர் என்பதால் மோடிக்கு அந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த மேலும் சில நாள் ஆகியிருக்கிறது. மோடி, இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானவர், முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற வாதம் உண்மையல்ல. இதற்கு ஆதாரம் அடுத்த 12 ஆண்டுகளில் அங்கு மதக் கலவரங்களே நடக்கவில்லை என்பது. பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் முஸ்லிம் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அரசு வேலை வாய்ப்பைப் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் விகிதாச்சாரத்தில் முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதை காந்திய வழியிலான மன்னிப்புக் கோரல் என்பேன், மற்றைய வகை மன்னிப்புக் கோரலைவிட இது மிக வலுவானது.

மோடி இன்றைக்குப் பேசும் ‘வளர்ச்சி மாதிரி' நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கையின் நீட்சிதானே? பெரு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் சாதகமான இந்த 'வளர்ச்சி மாதிரி' எப்படி உண்மையான வளர்ச்சியைத் தரும் என்று சொல்கிறீர்கள்?

வளர்ச்சி ஏற்படாதுதான், நீங்கள் சொல்வது உண்மை. பொருளாதார வளர்ச்சியின்போது வருவாய் உயர்ந்து ஏழைகளின் வாழ்வும் உயரும் என்பதொரு நம்பிக்கைதான். ‘சுதந்திரச் சந்தை' என்பதை இனி ஒழித்துக்கட்ட முடியாது. நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் வேறு வழியில்லாமல்தான் தாராளமயமாக்கலை ஏற்றார்கள். இதுவரை சந்தையால் பலன் காணாத மக்களின் முன்னேற்றத்துக்கு, மோடியிடம் திட்டம் இருப்பதுபோல்தான் தெரிகிறது.

ஒரு பொருளாதார நிபுணராக நாட்டுக்கு இப்போது எந்த விதமான பொருளாதாரக் கொள்கை தேவை என்று நினைக்கிறீர்கள்?

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வளர்ச்சித் திட்டங்கள்தான் இப்போதைய தேவை. ஏனெனில், அங்குதான் உற்பத்தி முதலீடு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. சூரிய ஒளியைப் பயன்படுத்தும் திட்டங்கள் முதற்கொண்டு மீனளத்தை அதிகரிப்பது வரை பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த முடியும். அரசியல் தலைவர்களுக்கு இரக்கச் சிந்தை இருந்தால் அனைவருக்கும் தரமான கல்வியும் சுகாதார வசதிகளும் கிடைக்கும். அரசியல் தலைவர்களிடம் மறைப்பதற்கான ஊழல்கள் இல்லையென்றால், நீதி பெறும் உரிமை மக்களுக்குத் தானாகவே எளிதாகிவிடும். சுதந்திரச் சந்தையின் பிற கொள்கைகள் இங்கு ஏற்கெனவே அமலில் இருக்கின்றன.

ஒரு விஷயம் புலப்படுகிறது… மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், “வளர்ச்சி தேவை” என்ற குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. ஆனால், வளர்ச்சி என்று அரசியல்வாதிகளும் மக்களும் எதைக் குறிப்பிடுவதாகப் பார்க்கிறீர்கள்?

இந்தக் குரல்களை ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிரான குரல்களாகவே நான் பார்க்கிறேன். மாற்றம், வளர்ச்சி என்று மக்கள் கோருவதன் உண்மையான பொருள் அதுதான். அதற்கு மேல் அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. மக்களுடைய வாழ்க்கையில் வியக்கத் தக்க மாற்றங்களை அரசுகளால் கொண்டுவந்துவிட முடியும் என்று அவர்கள் நம்புவதில்லை. உண்மை என்னவென்றால், அரசுகளால் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இந்தியாவை மேலும் நகரமயமாக்குவதே நம்முடைய பிரதான அரசியல் கட்சிகளின் இலக்காக இருக்கிறது. லட்சக் கணக்கான இந்தியக் கிராமங்களால் நகரமயச் சூழலில் வாழ முடியுமா?

இது நிறைவேற்றவே முடியாத சிந்தனை. கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை இனிதாக மாற்றலாம் என்பதே சாத்தியமானது.

சிறுபான்மையினர் - பட்டியல் இனத்தவர் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மிக மோசமான கல்வித்தரத்தால் பின்தங்கியிருக்கும் அவர்களுக்கு ஆரம்பக் கல்வி, உயர் கல்வி இரண்டுமே எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதுதான் முதலாவது. அடிப்படையானது.

காங்கிரஸின் மோசமான பின்னடைவுக்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?

தங்களுடைய ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்கக்கூட முடியாத மூன்றாம்தர அரசியல் தலைமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். மக்களோடு தொடர்புகொண்டு அவர்களை வழிநடத்த முடியாதவர்தான் தலைவர். நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதிப்பட்டபோது, அதை உணராமல் மனிதாபிமானமற்று சும்மா இருந்ததுடன், கவலைப்படாமல் உறங்கிய தலைமையின் அறிவுசார்ந்த நேர்மையின்மையே இந்தப் பின்னடைவுக்குக் காரணம்.

இப்படிப்பட்ட சூழலில் மக்கள் ஏன் இடதுசாரிகளை நோக்கி நகரவில்லை?

ஏனென்றால், இந்திய இடதுசாரிகள் மோசமானவர்கள் என்பதுதான் காரணம். உலகின் பல பகுதிகளில் இடதுசாரித் தலைவர்கள் எதேச்சதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும், ஏழைகளின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலோ கம்யூனிசம் - முதலாளித்துவம் இரண்டின் மோசமான அம்சங்களையே கம்யூனிஸ்ட்டுகள் பின்பற்றினார்கள். அறிவாளிகள்தான் என்றாலும், அவர்களுடைய நடவடிக்கைகள் காரணமாகவே இன்று கேலிப்பொருளாகிவிட்டனர்.

நீங்கள் இடதுசாரிகளின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித் தீர்கள். ஆனால், இடதுசாரிகள் அரசு வீழ்ந்தபோது உங்களைப் போன்றவர்கள் நடத்திய கொண்டாட்டங்களுக்கு எந்த நியாயமும் இல்லை என்பது இப்போது தெரிந்துவிட்டதே...

நான் கொண்டாடியவன் மட்டும் அல்ல. முன்னதாக, எங்கள் பத்திரிகை மூலமாக மக்கள் கருத்தை இடதுசாரிகளுக்கு எதிராக மாற்றத் தீவிரமாக முயன்றவனும்கூட. அதனாலேயே இடதுசாரிகள் ஆதரவில் ஆட்சி செய்த அன்றைய மத்திய அரசு எங்களைக் கடுமையாக ஒடுக்க முற்பட்டது. ஆனால், திரிணமூல் ஆட்சி செல்லும் திசை துரதிர்ஷ்டவசமானது. இடதுசாரிகளிடமிருந்த குண்டர்கள் இப்போது திரிணமூலில் சேர்ந்துவிட்டனர். ஆனாலும், திரிணமூல் காங்கிரஸ் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள ஓரிரு ஆண்டுகளைத் தரலாம் என்று கருதுகிறேன்.

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x