Last Updated : 11 Apr, 2014 08:44 PM

Published : 11 Apr 2014 08:44 PM
Last Updated : 11 Apr 2014 08:44 PM

மதுரை: ஊருக்கு ஊர் கோஷ்டிப் பூசலில் தவிக்குது அதிமுக

கட்சி எதிரிகளைப் பழிவாங்க தேர்தலைப் பயன்படுத்தும் நிர்வாகிகளால் ஊருக்கு ஊர் ஏற்படும் கோஷ்டி மோதலில் அதிமுக சிக்கித் தவிக்கிறது.

தமிழகம், புதுவையிலுள்ள 40 தொகுதியிலும் வென்று, பிரதமர் பதவியை எட்டிப் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் மக்களவைத் தேர்தலில் அதிமுக களமிறங்கியது. ஓராண்டுக்கு முன்பே இதற்கான பணிகளைத் தொடங்கி, தொகுதி தோறும் ‘நால்வர் குழு’ பங்கேற்ற செயல்வீரர்களும் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

முதலில் களமிறங்கிய அதிமுக

மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரச்சாரத் தொடக்கம் என அனைத்திலும் அதிமுக முதலில் களமிறங்கியது. பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவுக்கே சாதகமாக இருப்பதாக உளவுத்துறைகளும் அறிக்கை அளித்தன. அதேசமயம் குடிநீர், மின்சாரப் பிரச்னை காரணமாக மக்களிடம் அதிருப்தி நிலவியதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதனால் அந்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், அதிமுகவினருக்குள் ஊருக்கு ஊர் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரச்சாரத்தின்போது மின்வெட்டு, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் காட்டும் எதிர்ப்பைவிட, சொந்தக் கட்சியினரின் கோஷ்டி மோதலை சமாளிக்க முடியாமல் வேட்பாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.

அணிவகுக்கும் சம்பவங்கள்

மதுரை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற மேலூர் எம்.எல்.ஏ. சாமியின் கார் முன் மறியல், விருதுநகர் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற திருமங்கலம் எம்.எல்.ஏ, எம்.முத்துராமலிங்கம் வாகனத்தின் முன் மறியல், தேனி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டச் சென்ற அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வாடிப்பட்டியில் கோஷ்டி மோதல் என எதிர்ப்புச் சம்பவங்கள் அணிவகுக்கின்றன.

இதேபோல கரூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் தம்பிதுரை எம்.பி.க்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எதிர்ப்பு, திருச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் குமார் எம்.பி., அரசுக் கொறடா மனோகரனுக்கு எதிர்ப்பு, தென்காசி தொகுதியிலுள்ள தேவர்குளத்தில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன் பிரச்சாரம் செய்தபோது கோஷ்டி மோதல், ராமநாதபுரம் வேட்பாளர் ஏ.அன்வர்ராஜா பிரச்சாரம் செய்ய வந்தபோது காரியாபட்டியில் கோஷ்டி மோதல் என அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. பொது இடங்களில் நடைபெறும் இச்சம்பவங்களால் அதிமுக மீது மக்களிடம் அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகளிடம் சமரசம்

எனவே கட்சித் தலைமையின் உத்தரவின்படி அந்தந்த மாவட்டச் செயலர்கள் தொகுதிதோறும் நிர்வாகிகளை அழைத்துப் பேசி வருகின்றனர். அப்போது ‘கட்சிப் பிரச்சினைகளை தேர்தலுக்குப் பின் பேசிக் கொள்ளலாம். தற்போது ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவது முக்கியம். இல்லையேல் அனைவரின் பதவிகளும் பறிபோகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்’ என எச்சரிக்கை கலந்த அறிவுரையை வழங்கி வருகின்றனர். ஆனாலும் இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தேகமே என்கின்றனர் அதிமுகவினர்.

முதல்வர் எச்சரிப்பாரா?

இதுபற்றி அக்கட்சியினர் கூறுகையில், திமுக வேட்பாளர்களை அறிவித்தபோது பல மாவட்டங்களில் கருத்து வேறுபாடு நிலவி பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் தலைமை அழைத்துப் பேசியதால் தற்போது இருதரப்பும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அடிபணியும் அதிமுகவினரிடம் இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை கவலை அளிப்பதாக உள்ளது.

கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தைவிட, அவரைத் தோற்கடிப்பதன் மூலம் கட்சிப் பதவிகளில் உள்ள தங்களது எதிரிகளை வீழ்த்தி விடலாம் என்ற எண்ணம் சிலரிடம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத் தலையிட்டு அனைத்து மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளையும் எச்சரிக்காவிட்டால் தேர்தல் முடிவில் பெரும் சரிவை சந்திக்க நேரிடலாம்’ என்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x