Published : 23 Apr 2014 08:44 AM
Last Updated : 23 Apr 2014 08:44 AM
கோடிக்கணக்கான முஸ்லிம்கள், நரேந்திர மோடியின் பெயரைக் கேட்டாலே அச்சப்படும்போது, அவரால் எவ்வாறு நாட்டை வலிமையானதாக மாற்ற முடியும் என்று பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹார் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசியதாவது: “நீர்மூழ்கி போர்க்கப்பல்கள், ஏவு கணைகள், வெடிகுண்டுகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே நாட்டை வலிமையானதாக ஆக்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையை பலப்படுத்துவதன் மூலமே நாடு வலிமையாக மாற முடியும். இந்தியாவில் பல்வேறு மதம், மொழி, வாழுமிடங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.
நாட்டில் உள்ள கோடிக் கணக்கான முஸ்லிம்கள் அவரின் (நரேந்திர மோடியின்) பெயரைக் கேட்டாலே அச்சமடைகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அவரால் நாட்டை எவ்வாறு வலிமையானதாக மாற்ற முடியும்? நாட்டு மக்களை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாத தலைவரால், எந்தவிதமான நன்மையையும் செய்ய முடியாது.
பாஜக மோடியை முன்னிறுத்தியதன் மூலம் மூத்த தலைவர் வாஜ்பாயின் பாதையில் இருந்து திசை திரும்பிவிட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப் பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய முரண்பாடான செயல்திட்டங்களை அக்கட்சி கொண்டுள்ளதை அறிந்த பின்புதான் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது” என்றார் நிதிஷ் குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT