Published : 07 May 2014 12:00 AM
Last Updated : 07 May 2014 12:00 AM

8-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: களத்தில் 1,737 வேட்பாளர்கள்- ராகுல், ராப்ரி தேவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் போட்டியிடும் 8-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 1737 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை 18.47 கோடி வாக்காளர்கள் நிர்ணயிப்பார்கள்.

ராயலசீமை, கடலோர ஆந்திரத்தை உள்ளடக்கிய சீமாந்திராவில் 25 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15, பிஹாரில் 7, மேற்கு வங்கத்தில் 6, உத்தரகண்ட்டில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, இமாசலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள் என 7 மாநிலங்களை உள்ளடக்கிய 64 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

இந்த 64 தொகுதிகளில் 2009ல் காங்கிரஸ் 31 இடங்களிலும் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுபவர்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி (அமேதி), அவரது உறவினர் வருண் (சுல்தான்பூர்), மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா (கோண்டா), கிரிக்கெட் வீரர் முகம்மது கைப் (புல்பூர்) உள்ளிட்டோரின் தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்.

பிஹாரில் ராம் விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்), முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, ராஜீவ் பிரதாப் ரூடி (சரண்), இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா (மண்டி), முன்னாள் முதல்வர் பிரேம் குமாரின் மகனும் தற்போது எம்.பி.யாக உள்ள அனுராக் தாகூர் (ஹமீர்பூர்), உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.புரந்தேஸ்வரி, வி.கிஷோர் சந்திர தேவ், எம்.எம்.பல்லம் ராஜு உள்ளிட்டோரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

இந்த வாக்குப் பதிவுக்குப் பிறகு கடைசி கட்டமாக மே 12-ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மொத்தமுள்ள 543 தொகுதி களில் 438 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x