Last Updated : 05 May, 2014 09:17 AM

 

Published : 05 May 2014 09:17 AM
Last Updated : 05 May 2014 09:17 AM

எதிர்க்கட்சி வரிசைதான் என்பதை காங்கிரஸ் உணர்வது நல்லது: ஜேட்லி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில்தான் சீட்டுகள் கிடைக்கும் என்று கணித்துள்ள மாநிலங்களவை பாஜக தலைவர் அருண் ஜேட்லி, அவர்கள் தங் களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் நிதர்சனம் என்பதை உணர்ந்து மனம் சமாதானம் அடைவது நல்லது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கு வலிமையான பங்குள்ளது.

ஜனநாயக அமைப்பில் அரசியல் அதிகாரம் பரவலாக உள்ளது, அரசு என்பது மட்டும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டது அல்ல. எதிர்க்கட்சிகள், ஊடகம், நீதித்துறை, அதிகார வர்க்கம், மக்கள் சமுதாயம் ஆகியவையும் அதிகாரத்தில் பங்கு வகிக்கின்றன. பொது நலனைப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு வலுவான பங்குள்ளது.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். பின்னர் எதற்காக காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர அஞ்சவேண்டும்?

அவர்களுக்கு மக்களின் தீர்ப்பு கிடையாது என்பதும் இரட்டை இலக்கத்தில்தான் சீட்டுகள் கிடைக்கும் என்பதும் மிகத்தெளிவு. ஆளும் கூட்டணியில் பங்கு பெறுவதைப் பற்றி அவர்கள் கனவுகூட காணமுடியாது. ஆட்சியைவிட்டு அகற்றப்படுவது அவர்களுக்கு கசப்பாகவும் விரக்தியாகவும் உள்ளது.

பிரதமர் எதிர்மறையாக சிந்தித்து, தான் நியாமற்ற முறையில் தாக்கப்படுவதாக மக்களிடம் குறைபட்டுக் கொள்கிறார். காந்தி குடும்பத்தினர் தாங்கள் இந்தியாவுக்கு கடவுளின் பரிசு என்றும், தாங்கள் மட்டுமே ஆளவேண்டும் என்றும் கருதுகின்றனர். டீ விற்ற ஒருவர் தங்களை வென்று இந்தியாவை ஆளப்போவதை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

தங்களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் நிதர்சனம் என்பதை உணர்ந்து மனம் சமாதானம் அடைவது காங்கிரஸாருக்கு நல்லது. எதிர்க்கட்சி வரிசையில் சில காலம் இருப்பது உங்களை சுயபரிசோதனை செய்து எதிர்காலத்துக்குத் திட்டமிட உதவும். அரசியல் நிலைமைகள் நிரந்தரனமானவை அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x