Published : 24 Apr 2014 08:42 AM
Last Updated : 24 Apr 2014 08:42 AM

117 தொகுதிகளுக்கு 6-ம் கட்டமாக தேர்தல்: 2076 வேட்பாளர்கள், 18 கோடி வாக்காளர்கள்

தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மக்களவைக்கான 6-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

117 தொகுதிகளில் நடக்கும் இந்த வாக்குப்பதிவில் 18 கோடிக் கும் அதிகமான வாக்காளர்கள் 2076 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பார்கள். காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் பாஜக 24 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

அசாம் 6, பிஹார் 7, சத்தீஸ்கர் 7, ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 4, மத்தியப்பிரதேசம் 10, மகாராஷ்டிரா 19, புதுச்சேரி 1, ராஜஸ்தான் 5, தமிழ்நாடு 39, உத்தரப்பிரதேசம் 12, மேற்கு வங்கம் 6 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது

உத்தரப் பிரதேசத்தில் 4வது கட்டமாக நடக்கும் இந்த தேர்தலில் 187 வேட்பாளர்களின் வெற்றிதோல்வி நிர்ணயிக்கப்படும். இவர்களில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மருமகள் டிம்பிள் யாதவ் ( கனோஜ்) வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ( பாருக்காபாத்) உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்கள்.

மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகையுமான ஹேமமாலினியை எதிர்த்து நிற்பவர் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜீத் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்ரி.

பிஹாரில் தேர்தலைச் சந்திக்கும் வேட்பாளர்களில் பாஜகவின் ஷாநவாஸ் ஹுசைன் (பாகல்பூர்), தேசியவாத கட்சியின் பொதுச்செயலர் தாரிக் அன்வர் ( கத்திஹார்) உள்ளிட்டோர் அடங்குவர்.

மேற்கு வங்கத்தில் 6 தொகுதி களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் போட்டியிடும் ஜாங்கிபூர் இந்த தொகுதிகளில் ஒன்று.

6 ம் கட்டத் தேர்தலில் களம் காண்பவர்களில் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜும் ஒருவர். இவர் மத்தியப் பிரதேசம் விதிஷா தொகுதியில் நிற்கிறார்.

ஜார்க்கண்டில் நடப்பது இறுதி கட்டத் தேர்தலாகும். அசாமில் இறுதியாக 3வது கட்டத்தில் 6 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

ராஜஸ்தானில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 5 தொகுதி களுக்கு நடக்கும் தேர்தலில் 81 வேட்பாளர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x