Published : 24 Apr 2014 03:42 PM
Last Updated : 24 Apr 2014 03:42 PM

கங்கைத் தாய் அழைத்ததால் புனித பூமியில் போட்டி: வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த மோடி பேட்டி

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, இந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியில் அவர் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வாரணாசி (காசி) தொகுதியில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் வாரணாசியின் லாகுர்பீர் முதல் கச்சாரி வரையிலான 3 கி.மீ. தூர சாலை வழியே மோடி ஊர்வலமாகச் சென்றார். சங்கொலி எழுப்பியும், மலர் தூவியும் அவரை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். நடேசார் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அவருடன் உத்தரப் பிரதேச மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா, அக்கட்சியின் தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் உடன் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மோடி, தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை அளித்தார். அவரது வேட்புமனுவை பண்டித மதன் மோகன் மாளவியாவின் பேரன் கிரிதர் மாளவியா, பத்ம பூஷண் விருது பெற்ற லால் மிஸ்ரா, படகு ஓட்டும் தொழிலில் ஈடுபடும் வீரபத்ர நிஷாத், நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அசோக் ஆகியோர் முன்மொழிந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது: இந்த புனித நகரம் அமைந்துள்ள தொகுதியில் போட்டியிடுமாறு கங்கைத் தாய் என்னை அழைத்து வந்துள்ளார்.

முன்பு இங்கு போட்டியிட கட்சித் தலைமைதான் அனுப்பிவைத்துள்ளது என நினைத்தேன். புனித நகரான காசிக்கு செல்கிறோம் என்ற உணர்வுதான் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், இங்கு வந்த பின்புதான் என்னை இங்கு யாரும் அனுப்பவில்லை. நானாகவும் இங்கு வரவில்லை. கங்கைத் தாய்தான் என்னை அழைத்துள்ளார் எனத் தெரிந்தது. இந்நகருக்கு வந்ததன் மூலம் தாயின் மடியை தேடி வரும் குழந்தையைப் போன்ற நிம்மதியான மனநிலையை அடைந்துள்ளேன்.

நகரில் உள்ள ஏழை நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை செய்வதற்குரிய வலிமையை எனக்கு அளிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். காசியை உலகின் ஆன்மிகத் தலைநகராக மாற்றப் பாடுபடுவேன்.

சிவனை வழிபடுபவர்களுக்கு குஜராத்தில் உள்ள வாட்நகரும் (மோடியின் சொந்த ஊர்), வாரணாசியும் முக்கிய ஆன்மிகத் தலமாக இருக்கின்றது.

நான் பிரதமரானால், வாரணாசியில் நெசவாளர்களின் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) தொழில் விரிவாக்கத்துக்கு உதவும் வகையில் செயல்படுவேன். குஜராத்தில் காற்றாடி தயாரிக்கும் தொழிலில் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான் ஈடுபடுகின்றனர். ரூ. 35 கோடியாக இருந்த அவர்களின் தொழில் வர்த்தகத்தை ரூ.700 கோடியாக உயர்த்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன்.

குஜராத்தின் சபர்மதி ஆற்றை தூய்மைப்படுத்தியதைப்போன்று கங்கையை சுத்தம் செய்ய தகுந்த நடவடிக்கையை எடுப்பேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x