Published : 11 Apr 2014 12:00 AM
Last Updated : 11 Apr 2014 12:00 AM

மனைவியிடம் இருந்து மோடி விலகியது ஏன்?- சகோதரர் சோமாபாய் விளக்கம்

சிறிய வயதில் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் சமூக சம்பிரதாயத்துக்காகத்தான் யசோதாபென்னை நரேந்திர மோடி திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி விட்டார் என்று மோடியின் சகோதரர் சோமாபாய் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மோடியின் சகோதரர் சோமாபாயின் அறிக்கையை அனைத்து ஊடகங் களுக்கும் பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: “எங்களின் பெற்றோர் போதிய கல்வியறிவு இல்லாதவர்கள். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்களின் பெற்றோர் இவ்வாறு செய்துவிட்டனர். அன்றைய சமூக நடைமுறையையொட்டி சம்பிரதாயத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது.

ஆனால், அதில் விருப்பமில்லாத மோடி, இந்த உலகையே தனது குடும்பமாக வரித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டார். அதற்கு பின்பு, குடும்பத்தினருடன் அவர் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்கு சேவை செய்வதே அவரின் ஒரே விருப்பம்.

மோடி சென்ற பின், யசோதாபென் தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆசிரியையாக பணிபுரிந்து, பின்னர் ஓய்வு பெற்றுவிட்டார். 45 ஆண்டுகளுக்கு முன்பு வைதீகமான குடும்பம் ஒன்றில் நடந்த திருமணம் என்ற பின்னணியில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

இந்த பழைய சம்பவத்தின் அடிப்படையில் நரேந்திர மோடியின் இப்போதைய சமூக அந்தஸ்தை எடை போடக்கூடாது.

எங்கள் பெற்றோருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நரேந்திர மோடி வித்தியாசமானவர். நாட்டுக்கு சேவை செய்வதில் அவர் தீவிரமாக இருந்தார். புத்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் உபதேசங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்” என்றார்.

சொந்த விஷயம்

மோடியின் மற்றொரு சகோதரர் பிரகலாத் கூறுகையில், “தனக்கு திருமணமாகவில்லை என்று மோடி ஒருபோதும் கூறியதில்லை. சில காரணங்களுக்காக தனது திருமணம் பற்றிய தகவலை இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களின்போது தாக்கல் செய்த வேட்புமனுக்களில் அவர் குறிப்பிடாமல் இருந்துள்ளார். இச்செயலை வேண்டுமென்றே செய்தாரா, இல்லையா என்பதெல்லாம் அவரின் சொந்த விஷயம்” என்றார்.

வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் அலுவலர் மறுப்பு

குஜராத் மாநிலம், வதோத ராவில் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி, “மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரின் மனைவியின் சொத்து விவரங் களை தெரிவிக்கவில்லை. பான் கார்டு எண், வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேட்பு மனுவில் அனைத்து விவரங் களையும் வேட்பாளர் தெரிவிக்க வேண்டும். எனவே, முழு விவரங்களைத் தெரிவிக்காத மோடியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஆனால், அதை வதோதரா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வினோத் ராவ் ஏற்கவில்லை. இதேபோன்ற விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மேற்கோள்காட்டிய வினோத் ராவ், மோடியின் மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து வதோதரா மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடி, மதுசூதன் மிஸ்திரி, ஆம் ஆத்மி வேட்பாளர் சுனில் குல்கர்னி ஆகியோர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

உண்மையை மறைத்தது ஏன்? காங். கேள்வி

சட்டமன்றத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் மனைவி குறித்த உண்மையான தகவலை மோடி வெளியிடாமல் மறைத்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சாந்தாராம் நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இப்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயரை குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, இதற்கு முன்பு கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் ஏன் உண்மையை மறைத்துவிட்டார்? எதற்காக தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்?

இப்போது தாக்கல் செய்துள்ள மனுவிலும், தனது மனைவியின் பான் கார்டு விவரங்கள், கடைசியாக தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரங்கள் குறித்து தெரிவிக்கவில்லை. மனைவியின் சொத்து விவரம் குறித்து தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார். அது பற்றி அவர் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

மோடியின் வேட்புமனுவை வாங்கிய தேர்தல் அலுவலர், அந்த விவரங்களை தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருக்க வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால், மனுவை வாங்காமல் நிராகரித்திருக்க வேண்டும்” என்றார்.

மோடிக்கு வாக்களிக்காதீர்கள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ட்விட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: “திருமணமானவர் என்பதை மோடி ஒப்புக்கொண்டுள்ளார். தனது மனைவிக்கு உரிய உரிமையை மோடி வழங்கவில்லை. அதோடு, வேறொரு இளம் பெண்ணை கண்காணிக்க நடவடிக்கை எடுத்த மோடியை நாட்டில் உள்ள பெண்கள் எப்படி நம்புவார்கள்? மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x