Published : 18 Apr 2014 09:16 AM
Last Updated : 18 Apr 2014 09:16 AM

ராகுல்தான் எங்கள் பிரதமர்: சென்னையில் சசி தரூர் உற்சாகம்

சொந்த தொகுதியான திருவனந்தபுரத்தில் தேர்தல் முடிந்த கையோடு தென் சென்னை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ரமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்னை வந்திருந்தார் மத்திய அமைச்சர் சசி தரூர். "தமிழ் அதிகம் தெரியாது, அதனால் பொதுக்கூட்டம் மாதிரி இல்லாமல் வீடு வீடாகச் சென்று நேரடியாக மக்களை சந்திப்பதுதான் திட்டம்" என்று சொன்னவரை “தி இந்து”வுக்காக பேட்டி கண்டோம்.

வளர்ச்சி, வலிமையான இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார் பாஜக-வின் பிரத மர் வேட்பாளர். இவரை எதிர்த்து காங்கிர ஸின் பிரச்சாரமாக இருப்பது மதச்சார்பற்ற அரசியல். வளர்ச்சி என்கிற கோஷத்தை எதிர்கொள்ள மதச்சார்பற்ற அரசியல் என் கிற கோஷம் போதுமானதாக இருக்கிறதா?

வளர்ச்சி என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி. நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்தியா வளர்வது மட்டுமல்ல, அந்த வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடைவது பற்றி குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு மக்களைச் சென்றடைவது பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் அக்கறை காட்டியிருக்கிறோம். மோடி வளர்ச்சி பற்றி பேசும்போது அது குறிப்பிட்ட சிலருடைய வளர்ச்சி பற்றியதாக இருக்கிறது. அதுதான் எங்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு. அவர்கள் முன்பு இந்தியா ஒளிர்கிறது என்றார்கள். நாங்கள் யாருக்காக இந்தியா ஒளிர்கிறது என்று கேட்டோம். இந்தியா யாருக்காக ஒளிரவில்லையோ அவர்களுக்கு லாபம் இல்லையென்றால் இந்தியா ஒளிர்கிறது என்பதில் என்ன பொருள் இருக்க முடியும்? அது அவர்களுடைய ஆட்சியில் நடக்கவில்லை. மாறாக எங்களது ஆட்சியில் நடந்திருக்கிறது. எங்களது ஆட்சியில் வருடத்துக்கு குறைந்தது பத்து மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து மேலே வந்திருக்கிறார்கள். குஜராத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு எண்ணிக்கை, பிரசவத்தில் இறக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். பல தளங்களில் வளர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது குஜராத் 12-வது இடத்தில் இருக்கிறது. இதை எப்படி வளர்ச்சியின் முன்மாதிரி என்று சொல்ல முடியும்? 11 மாநிலங்கள் அதைவிட சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனவே? மதசார்பற்றதன்மை என்பது எங்களைப் பொறுத்தவரையில் முக்கியமானப் பிரச்சினை. அதை மோடி போன்றவர்கள் எதிர்ப்பதால் நாங்கள் அதை முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக நாங்கள் வளர்ச்சியின் பாதையில் இல்லை என்று பொருள் இல்லை.

மோடி அலை - என்ன நினைக்கிறீர்கள்?

மோடி அலை என்பது குறைந்தபட்சம் தென்னிந்தியாவில் இல்லை என்பதை பார்த்துவிட்டேன். கேரளாவில் இல்லை, தமிழ்நாட்டிலும் இல்லை. ஆந்திராவில் ஒரு குழப்பம் நிலவுகிறது. ஆனால் அந்த குழப்பத்தால் பாஜக-விற்கு எந்த ஆதாயமும் இல்லை. கர்நாடகாவில் வேண்டுமானால் எடியூரப்பாவால் சில மாற்றங்கள் தெரியலாம்.

பெண்களுக்கு தேர்தலில் சீட் கொடுப் பது தொடங்கி பொதுவாக பெண்களைப் பற்றிய பார்வை வரை பாஜக மீது பலவிமர் சனங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த எல்லா விமர்சனங்களையும் காங்கிரஸின் மீதும் வைக்கலாமா?

பெண் வேட்பாளர்களை தேர்ந் தெடுப்பதும் தேர்ந்தெடுக்காததும்கூட ஒரு விதத்தில் நாம் முன்வைக்க நினைக்கும் அரசியல் தெரிவு பற்றிய குறியீடுதான். தொடர்ந்து சோனியா காந்தி தொடங்கி பல காங்கிரஸ் தலைவர்களும் அதனால்தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறோம். இந்த முறை தேர்தலில் பெண் வேட்பாளர்கள் குறைவு என்பது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கடந்த தேர்தலில் 11 சதவீதம் பெண் வேட்பாளர்கள் இருந்தார்கள். இந்த தேர்தலில் எல்லா கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 7 சதவீதம்தான் பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு இல்லாததே காரணம். அது பெண்களுக்கு அதிகாரம் தரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பெண்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடும் பார்வையும் பாஜக-வின் பார்வையைவிட விசாலமான ஒன்றாகத்தான் இருக்கிறது. பெண்களை மோசமாக நடத்திய முதாலிக்கை கட்சியில் சேர்த்துவிட்டு பின்னர் கடுமையான விமர்சனங்கள் வந்த பிறகு விலக்கினார்கள். ஆனால் அவர்களுடைய பார்வைக்கும் முதாலிக்கின் பெண்கள் குறித்த பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நாங்கள் அப்படி இல்லை.

ராகுல் காந்தி பிரதமர் ஆக தயார் என்று சொல்லியிருக்கிறாரே?

கட்சி சொல்வதை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். பாராளுமன்றம் முதலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஜெயிக்கும் கூட்டணி அதன் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார். கட்சியின் துணைத் தலைவர் அவர். கட்சியின் தலைவர் தனக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அதை நாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு காரணமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை.

பல வருடங்கள் கழித்து தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறீர்களே?

முதல்முறையாக எங்களது பலத்தை காட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எங்களது பாரம்பரிய வாக்காளர்களில் ஒரு பகுதியினருக்கு எங்களது கூட்டணிக் கட்சிகள் பற்றி ஒரு அதிருப்தி இருந்திருக்கிறது. இப்போது அவர்களது வாக்குகள் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பலருக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

இலங்கைப் பிரச்சினையால் பல இடங்களில் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை இருக்கிறதே?

இலங்கை பிரச்சினையில் எங்களுக்கு எதிரான மனநிலை கொஞ்சமும் நியாய மற்றது. தேசிய நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆக்கப் பூர்வமாக இருந்திருக்கிறோம். அதே நேரம் இலங்கைத் தமிழரின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறோம். 1960களில் சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தம் தொடங்கி பல சந்தர்ப்பங்களில் நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். இலங்கை தமிழரின் நலனை நாங்கள் எப்போதும் ஒதுக்கியதில்லை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x