Published : 25 Apr 2014 09:18 AM
Last Updated : 25 Apr 2014 09:18 AM

மோடிக்காக மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு: ராஜ் தாக்கரே

இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போது கூட கணிக்க முடியாத நிலையே இருக்கிறது என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனது ஆதரவை அளித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தேர்தல் முடிவுகள் என்னவாகும் இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

ராஜ் தாக்கரே 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

"இந்த மாதிரியான ஒரு தேர்தலை நான் இதுவரை சந்தித்ததில்லை. மோடி அலை இருப்பது உண்மை என்றால் கோபிநாத் முண்டே போன்ற பாஜக தலைவர்கள் ஏன் அவர்களது தொகுதிக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை இப்போதுகூட கணிக்க முடியாத சூழலே இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததால் மட்டுமே பாஜகவுக்கு என் ஆதரவை அளித்துள்ளேன். ஒருவேளை நெருக்கடிகள் காரணமாக தே.ஜ.கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக வேறு யாரேனும் ஒருவரை முன்நிறுத்தியிருந்தால் பாஜகவுக்கு நிச்சயமாக ஆதரவு அளித்திருக்க மாட்டேன்" என்றார்.

நரேந்திர மோடி குஜராத்வாசிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக, ராஜ்தாக்கரே சாடியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தாக்கரே, "மோடி என் நன்பர் என்ற முறையில் அவருக்கு இந்த அறிவுரையை கூறினேன். மோடியை ஆதரிப்பதால் எந்த பிரச்சினைகள் குறித்தும் பேசக்கூடாது என்று நிர்பந்தம் இல்லையே. என் விருப்பத்திற்கு ஒவ்வாத விஷயங்களை பார்க்கும் போது நிச்சயமாக அதை வெளிப்படையாக தெரிவித்துவிடுவேன்" என்றார்.

சிவசேனாவில் இருந்து பிரிந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கினார். 2009 தேர்தலில் எம்.என்.எஸ். கட்சி பாஜக ஓட்டுகளை பிரித்து பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. தற்போதைய தேர்தலில் தே.ஜ.கூட்டணி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பதாக கூறினாலும் அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா வேட்பாளரை எதிர்த்து தனது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.

நேர்காணல்:

மோடியை ஆதரிக்கிறீர்கள். அப்படி என்றால் மோடி அலையை காண்கிறீர்களா?

இந்த மாதிரியான ஒரு தேர்தலை நான் இதுவரை சந்தித்ததில்லை. மோடி அலை இருப்பது போன்று ஒரு தோற்றம் இருக்கிறது. அது உண்மை என்றால் கோபிநாத் முண்டே ஏன் அவரது தொகுதிக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது.

தே.ஜ.கூட்டணியில் இணையும்படி நிதின் கட்கரி அழைப்பு விடுத்தபோது அது அவரது சுய விருப்பம் என சிவசேனா விமர்சித்தது. ஆனால் கோபிநாத் முண்டேவும் பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தாரா?

கட்காரி என்னை சந்திப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே கோபிநாத் என்னை சந்தித்து தே.ஜ.கூட்டணியில் இணையுமாறு அழைத்தார். ஆனால் கட்காரியோ அல்லது முண்டேவோ இருவரும் கூட்டணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான தீர்வை தெரிவிக்கவில்லை. வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே என்னை அவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் ஆதரித்திருப்பீர்களா?

நிச்சயமாக இல்லை. என் முடிவில் நான் தெளிவாக இருந்தேன். என் ஆதரவு மோடிக்காக மட்டுமே.

2013-ம் பால் கூட்டுறவுச் சங்கம் வழங்கிய வறட்சி நிவாரணத் தொகை ரூ.22 கோடியை திருப்பு அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு குஜராத் கோரிக்கை விடுத்தது. இப்படி இருக்கும் போது மோடி குஜராத்தில் இருந்து மற்ற மாநிலங்களை வேற்றுமைபடுத்தி பார்க்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

நதி நீர் பங்கீடு போன்ற சிறு பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே ஏற்படுவது சகஜம். ஆனால், மோடி ஒரு உயரத்தை அடைந்து விட்டார். எனவே, அவர் இனிமேல் அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக நடத்துவார் என்றே நம்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம், மகாரஷ்டிரம் குஜராத்தியர்களின் தாய்வீடு என கூறியிருந்தீர்கள். அப்படி இருக்க மோடிக்கு ஆதரவு அளிக்கக் காரணம் என்ன?

அது விமர்சனம் அல்ல. நட்பு ரீதியான அறிவுரை. நரேந்திர மோடி இத்தருணத்தின் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், என் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் விஷயங்களை நான் வெளிப்படையாக கூறி விடுகிறேன்.

நீங்களும் சிவசேன தலைவர் உத்தவ் தாக்கரெவும் மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சித்துக் கொள்கிறீர்கள். பால் தாக்கரேவை கூட விமர்சித்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் வருந்துகிறீர்களா?

எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. நான் பால்தாக்கரேவை புறமுதுகில் குத்தியதாக் உத்தவ் விமர்சிக்கிறார். ஆனால் அதற்கும் நான் எதுவும் கூறவில்லை. பால் தாக்கரே என்னை துரோகியாக கருதியிருந்தால் நான் அனுப்பிய சிக்கன் சூப்பை அவர் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.பால்தாக்கரே என்னை துரோகியாக பார்க்காதபோது மற்றவர்கள் ஏன் அதை சர்ச்சையாக்குகிறார்கள் என்பது மட்டுமே என் கேள்வியாக இருந்தது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x