Last Updated : 10 May, 2023 07:52 PM

 

Published : 10 May 2023 07:52 PM
Last Updated : 10 May 2023 07:52 PM

வேளாண் மற்றும் மீன்வளப் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: ஒரே விண்ணப்பம் வழியே மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு

கோவை: நடப்புக் கல்வியாண்டில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கைப் பணி இன்று (மே 10) தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் இன்று (மே 10) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்வி நிர்வாகங்களும் இணைந்து, நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான பொது மாணவர் சேர்க்கை பணியை தொடங்கி உள்ளோம். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.

இதில், இளநிலையில் பிஎஸ்சி பிரிவில் வேளாண்மை (தமிழ்/ஆங்கிலம்), தோட்டக்கலை (தமிழ்/ ஆங்கிலம்), வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை, பட்டுவளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பிடெக் பிரிவில் வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித்தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் ஆகிய 14 பட்டப்படிப்புகள் உள்ளன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 வகையான இளநிலை பட்டப்படிப்புகள், 3 தொழிற்கல்வி சார்ந்த படிப்புகள் உள்ளன.

நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலை.யின் 14 பட்டப்படிப்புகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளும், மீன்வளப் பல்கலை.யின் 6 பட்டப்படிப்புகளுக்கும், 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்தவாறு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வேளாண் பல்கலை.யின் இளநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், மீன்வளப் பல்கலை.யின் படிப்புகள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கைப் பணிக்கான நடவடிக்கைகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.

இரண்டு பல்கலைக்கழங்களின் படிப்புக்கும் ஒரே விண்ணப்பத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களது சேர்க்கை விண்ணப்பங்களை http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ ஆகிய மூன்று இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கட்டணமாக ரூ.250-ம், மற்ற அனைத்து இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை இணையதள விண்ணப்பம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இணையதளப் பக்கம் 09.06.2023 வரை செயல்பாட்டில் இருக்கும். மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும். இதில் சிறப்பு இட ஒதுக்கீடு, சிறப்பு இட ஒதுக்கீட்டு உடன் கூடுதலான இட ஒதுக்கீடு ஆகியவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x