Last Updated : 17 Nov, 2022 04:10 AM

 

Published : 17 Nov 2022 04:10 AM
Last Updated : 17 Nov 2022 04:10 AM

அரசு நூலகங்களின் போட்டித் தேர்வு பிரிவுகளை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தொகுதி-2 முதல்நிலைத் தேர்வில் 105 பேர் தேர்ச்சி

ஆத்தூர் கிளை நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வுப் பிரிவில் உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள்.

சேலம்: சேலம், எடப்பாடி, ஆத்தூரில் உள்ள அரசு நூலகங்களில் போட்டித் தேர்வுப் பிரிவுகளைப் பயன்படுத்திய தேர்வர்களில் 105 பேர், டிஎன்பிஎஸ்சி தொகுதி- 2 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்ட மைய நூலகம், எடப்பாடி, ஆத்தூர் கிளை நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவு உள்ளது. இதைப் பயன்படுத்தியவர்களில் 105 பேர் அண்மையில் வெளியான டிஎன்பிஎஸ்சி தொகுதி-2-க்கான முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இது குறித்து நூலகர்கள் கூறியதாவது: போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுக்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த தேர்வர்கள் தினமும் வந்து அங்குள்ள புத்தகங்களையும், தங்களது சொந்த புத்தகங்களையும் படித்துச் செல்கின்றனர். அவர்களுக்காக அரசு விடுமுறை, வார விடுமுறைகளின்போதும் நூலகம் திறக்கப்பட்டிருக்கும். அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன.

எடப்பாடி கிளை நூலகத்தில் மேட்டூர், ஆட்டையாம்பட்டி, சங்ககிரி, ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 120 பேர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். அவர்களில் 16 பெண்கள் உள்பட 42 பேர், டிஎன்பிஎஸ்சி தொகுதி-2க்கான முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு டிஜிட்டல் நூலகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆத்தூர் கிளை நூலகத்தில் 150 பேர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். அவர்களுக்கு, தனியார் பயிற்சி மையம் சார்பில் மாதந்தோறும் கட்டணமின்றி மாதிரித் தேர்வும் நடத்தப்பட்டது. அவர்களில் 14 பெண்கள் உள்பட 40 பேர், டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்ட மைய நூலகத்தின் போட்டித் தேர்வுப் பிரிவை தினமும் 150 பேர் பயன்படுத்தி வந்த நிலையில், அவர்களில் 23 பேர் டிஎன்பிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் பிரதானத் தேர்விலும் வெற்றி பெற்று, அரசுப் பணிக்கு செல்வது அரசு நூலகங்களின் போட்டித் தேர்வு மையத்தைப் பலரும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊக்கமாக இருக்கும், என்றனர். போட்டித் தேர்வு எழுதுபவர் களுக்காக அரசு விடுமுறை, வார விடுமுறைகளின் போதும் நூலகம் திறக்கப் பட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x