Published : 17 Nov 2022 05:28 AM
Last Updated : 17 Nov 2022 05:28 AM

கலை, அறிவியல் பாட திட்டத்தை மாற்ற திட்டம்: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: கலை, அறிவியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

உயர்கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து அரசுக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 325இடங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 173 இடங்கள் நிரம்பியுள்ளன. இதில் கணிதம் பாடத்தில் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது.

4 ஆயிரம் பணியிடங்கள்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க உள்ளோம். இதுதவிர அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மீதமுள்ள காலியிடங்களில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் உரிய விதிகளின்படி நியமனம் செய்யப்பட உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்கள் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு, தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்வதில் தயக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து பேசியுள்ளோம். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆய்வுக் கூட்டம் இம்மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கிறது.

கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து எந்தெந்த கல்லூரிகளில் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து கருத்துகளை கேட்டுவருகிறோம். அதில் முன்னுரிமை அடிப்படை யில் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.

பருவத்தேர்வு தாமதமாகும்: அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவர் 50 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பருவத்தேர்வை எழுத முடியும். நடப்பாண்டில், தற்போதுவரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் முதல் பருவத் தேர்வு சற்று தாமதமாக நடத்தப்பட உள்ளது.

பொறியியல் படிப்பில் தமிழ் வழிக் கல்வி கொண்டுவர வேண்டும் என்று பாஜகவினர் பேசி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் இருந்தே சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் கற்கும் முறை அமலில் உள்ளது. தொடர்ந்து தமிழர் பண்பாடு உள்ளிட்ட தமிழ் பாடங்களும் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x